சென்னை: காஞ்சிபுரம் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வெளியான பரபரப்பு குற்றச்சாட்டில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தொடர் சிலை முறைகேடு புகார்களை போலவே காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளது. சோமாஸ்கந்தர் சிலை என்பது சிவன், பார்வதி, முருகன் ஆகியோர் சேர்ந்து இருக்கும் சிலை வடிவம் ஆகும்.
இது 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த சிலையில் சில சேதங்கள் ஏற்பட்டு இருந்தது. அதனால் இதற்கு பதிலாக வேறு ஒரு தங்க சிலை செய்தனர். ஸ்தபதி முத்தையா என்பவர் மூலம் இந்த சிலை வடிவமைக்கப்பட்டது.
இதற்காக 100 கிலோ தங்கம் வசூலித்தார்கள். ஆனால் இந்த புதிய சிலையில் ஒரு துளி தங்கம் கூட இல்லை என்று புகார் எழுந்தது. அண்ணாமலை என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கில் தலைமறைவாகி இருந்த ஸ்தபதி முத்தையாவுக்கு நிபந்தனையுடன் உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது. இதில் பல பேர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக வெளியான பரபரப்பு குற்றச்சாட்டில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு இருக்கிறார். அதோடு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார் கவிதா.
இவர் மட்டும் 8.7 கிலோ தங்கம் கையாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 8.7 கிலோ தங்கம் கையாடல் தொடர்பாக தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.