ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி: ‘மக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா?’

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

243 வழக்குகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டதை சட்டம் வழங்கியுள்ள அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்துவதாக மட்டுமே பார்க்க முடியும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து வழக்குகளின் முதல் தகவல் அறிக்கையைப் படித்தாலே அவை அனைத்தும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போதுதான் பதிவு செய்யப்பட்டன என்பது புலனாகிறது என்று கூறியுள்ள நீதிமன்றம், காவல் துறை மற்றும் தமிழக அரசை இந்தத் தீர்ப்பில் கடுமையாக விமர்சித்துள்ளது.

ஒரு நபரின் பெயர் 100 முதல் தகவல் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இன்னொருவரின் பெயர் 85 முதல் தகவல் அறிக்கைகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள நீதிமன்றம், அவர்கள் ஒரு வழக்கில் பிணை பெற்றாலும் வேறொரு வழக்கில் கைது செய்வதற்காக இத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டனவா என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

“அரசு எப்படி இவ்வாறு அலட்சியமாகவும் பொறுப்புணர்வற்றும் இருக்க முடியும்?” என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் கேட்டுள்ளது.

sterlite madurai high court

“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஒருவர் ஒரு மிகச் சிறிய பங்கு வகித்திருந்தாலும், அவர்கள் வீட்டுக்கதவு நள்ளிரவில் தட்டப்படும் என்றும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அச்சத்தில் அவர்கள் இருப்பார்கள் என்று அரசுக்கு தெரியாமலோ, அக்கறை இல்லாமலோ போய் விட்டதா? தங்கள் உற்றார் உறவினர்களை இழந்த மக்கள் தாங்களோ தங்கள் அன்புக்குரியவர்களோ கைது செய்யப்படுவோம் என்று தொடர்ந்து பயப்பட வேண்டுமா? இவற்றை அரசு தெரியாமல் செய்ததா, இல்லை அரசின் நோக்கமே இதுதானா?” என்று நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

போராட்டம் நடந்த நாளன்று தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில், துணை வட்டாச்சியர் சேகர் என்பவர் கொடுத்த அடிப்படையில் போராட்டக்காரர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை சட்டவிரோதமானது மற்றும் செல்லாது என்று அறிவிக்கக் கோரிய இரு வேறு ரிட் மனுக்கள் மீது வழங்கிய தீர்ப்பில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியரகம் சேதப்படுத்தப்பட்டதாக மட்டும் சிப்காட் காவல் நிலையத்தில் 78 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஸ்டெர்லைட் ஊழியர்கள் குடியிருப்பில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக 39 வழக்குகளும், ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக 31 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

மேலும் தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் 24 வழக்குகளும், வடக்கு மற்றும் மத்திய காவல் நிலையங்களில் தலா 15 வழக்குகளும் , தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆறு வழக்குகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டன.

முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே சமயத்திலும், சில சம்பவங்கள் சில நிமிட இடைவெளியில் மட்டுமே நிகந்துள்ளன என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.

தமிழக அரசின் உள்துறைச் செயலர், காவல் துறை இயக்குநர், கூடுதல் காவல் துறை இயக்குநர் (சி.பி.சி.ஐ.டி), தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போராட்டம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட தூத்துக்குடியில் உள்ள ஐந்து காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் ஆகியோர் இந்த வழக்கில் பதில் மனுதாரர்களாக இருந்தனர். -BBC_Tamil

TAGS: