அஸ்ஸாம்: அரசியல் மற்றும் என்.ஆர்.சியால் பாதிக்கப்படும் 40 லட்சம் உயிர்கள்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், அஸ்ஸாமிகள் மற்றும் அஸ்ஸாமியர் அல்லாதவர்கள் என்ற பிரச்சனை இப்போது தோன்றியதில்லை. பல தசாப்தங்களாக தொடர்வது. 70களில் இது தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிந்தை அடுத்து அங்கு தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்குவதாக 1985ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்பந்தம் ஒன்றை போட்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்த பெண்ணின் திருமணம் அஸ்ஸாமில் வசிப்பவரோடு நடைபெற்றது. கல்வியறிவில்லா ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளம் பெண்ணிடம் பிறப்புச் சான்றிதழ் இல்லை. திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி.) இறுதி வரைவுப்பட்டியலில் அந்த பெண்ணின் கணவர் பெயர் இடம் பெற்றிருக்கிறது, ஆனால் இந்திய குடியுரிமை பெற்றிருந்தாலும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் அந்த பெண்ணின் பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை.

இந்த விவகாரம் பற்றி மாநிலங்களவையில் குரல் கொடுத்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்தா, “அவமானம், அவமானம்” என்று முழங்கினார்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுபோன்ற பல முழக்கங்களும், அமளிதுமளிகளும் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தன. இந்த பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க தலைவர் அமித் ஷா “முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் செய்ய முடியாததை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி செய்து காட்டியுள்ளது” என்றார்.

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு என்.ஆர்.சி மையம்

வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்தவர்களை வெளியேற்றுகிறோம் என்பது பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் ஆயுதமாக இருக்கிறது. என்.ஆர்.சி திட்டம் மேற்கு வங்க மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தலாம் என அந்த மாநிலத்திலிருந்து குரல் எழுவதாக பா.ஜ.க தலைவர் கைலாஷ் விஜய்வர்கிய் கூறுகிறார்.

மேற்கு வங்க மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியும் இதை ஓரளவு உணர்ந்திருக்கலாம்.

கெளஹாத்தியில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இரண்டாவது மற்றும் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட சற்று நேரத்திலேயே, இது பா.ஜ.கவின் வாக்கு வங்கி அரசியலின் ஒருபகுதி என்று அவர் காட்டமாக விமர்சித்தார். “பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள், வாக்களிப்பவர்கள் என இந்த பட்டியல் இரு பிரிவாக பிரிக்கிறது” என்பதே மம்தாவின் கருத்தாக கூறப்படுகிறது.

அசாம்

கொல்கத்தாவில் திங்களன்று செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, வங்காளிகள், பிஹாரிகள், இந்து, முஸ்லிம் உட்பட பல்வேறு பிரிவை சேர்ந்த மக்கள் தேசிய குடிமக்கள் பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக விரைந்து வினையாற்றிய மம்தா பானர்ஜி, தலைநகர் டெல்லிக்கு வந்து எதிர்க்கட்சி தலைவர்களையும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவையும், பா.ஜ.கவின் மூத்தத் தலைவர் லால் கிருஷ்ண அத்வானியையும் சந்தித்து பேசினார்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவிருப்பதாக கூறிய அவர், இதன் மிகப்பெரிய சுமையை அசாமின் அண்டை மாநிலமான மேற்கு வங்கம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்பதை எடுத்துரைக்கப் போவதாக தெரிவித்தார்.

அசாம்

இந்த தேசிய குடிமக்கள் பட்டியலில் வங்காள மொழி பேசும் மக்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், பெருமளவிலான மக்களின் பெயர்கள் பட்டியலில் சேர்க்கப்படாத சூழ்நிலையை, பட்டியல் தயாரிப்போர் உருவாக்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

அசாமில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அங்கு போராட்டம் நடத்தப்பட்டபோது, அம்மாநிலத்தில் பதவியில் காவல்துறை அதிகாரி எஸ்.ஆர்.தாராபுரி அண்மையில் அசாம் சென்றிருந்தார்.

“கிராமப் பஞ்சாயத்து எந்தவொரு நபரின் வசிப்பிட சான்றிதழை வழங்கினால், அதை பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. ஆனால் இந்த குடிமக்கள் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதோடு, வேறு சில சான்றிதழ்களையும் கேட்கின்றனர், அது பலரிடம் இருப்பதிலை” என்கிறார் தாராபுரி.

அதேபோல், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மட்டுமே வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்படும் நடைமுறையை மாற்றி, சில ஆண்டுகளுக்கு முன்னர் வழக்கறிஞராக பணியாற்றியவர்களும் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த தீர்ப்பாயத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் வழக்கறிஞர் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பின்பற்றுபவர் என்பது தற்போது வெளிப்படையாக வெளியாகியிருக்கிறது என சமூக செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அசாம்

இந்த குடிமக்கள் பதிவேடு இறுதியானதல்ல

நாடாளுமன்ற மக்களவையில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த பட்டியல் இறுதியானதல்ல, பட்டியலில் இடம் பெறாதவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும் என்றும், அவர்களை உடனடியாக நாடு கடத்தும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாது என்றும் உறுதி கூறினார்.

அமளிகளுக்கும் கூச்சல்களும் இடையில் பேசிய உள்துறை அமைச்சர், இதற்கு பிறகும் அவர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால், வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தை அணுகலாம் என்றும் குறிப்பிட்டார்.

அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு திங்களன்று இரண்டாவது முறை வெளியிடப்பட்ட பிறகு பேசிய இந்தியப் பதிவுத் துறைத் தலைவர், அதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 40 லட்சம் நபர்களின் பெயர்கள் இல்லை என்று குறிப்பிட்டார்.

குடியுரிமை மறுக்கப்பட்ட 40 லட்சம் மக்களின் நிலை என்ன என்ற கேள்வி இப்போது அனைவரின் முன்பும் பிரம்மாண்டமானதாக வியாபித்து அச்சுறுத்துகிறது.

இனி அவர்கள் எங்கே வசிப்பார்கள்? சில காலத்திற்கு பிறகு அவர்களுடைய சான்றிதழ்கள் போலியானவை என்று கண்டறியப்பட்டாலோ அல்லது வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தில் அவர்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் கதி என்ன?

அசாம்

தற்போதைய நிலையே தொடரும்

அவர்கள் வங்கதேசத்திற்கு அனுப்பப்படுவார்களா? அவர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படவிட்டாலும் இங்கு அவர்களுக்கான உரிமை என்ன?

“இது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனை இல்லை, எனவே இந்தியாவின் தேசிய குடிமக்கள் பட்டியலில் இடம் பெறாதவர்களை வங்கதேசத்திற்கு திரும்ப அழைத்து கொள்வது என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று த இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் வங்கதேச கலாசார அமைச்சர் அஸ்துஜ்ஜமா நூர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பா.ஜ.க தலைவர் அமித் ஷாவிடம் கேட்டபோது, அந்த சூழ்நிலை வரும்போது அதைப்பற்றி பேசலாம் என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

பட்டியலில் இடம்பெறாத 40 லட்சம் நபர்களின் குடியுரிமை நிலை முன்பிருந்ததைப் போலவே தொடரும் என்று அசாம் மாநில என்.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா தெரிவித்தார்.

அசாம்

மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத், குடியுரிமை கேள்விக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு சட்ட உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றாமல், தேவையான உதவிகளை மத்திய மாநில அரசுகள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பட்டியலில் இடம் பெறாதவர்கள் மீது அரசு உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காது என்று கூறிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “தேசிய மக்கள் பதிவேடு விவகாரத்தை அரசியலாக்கி மக்களிடையே அச்சத்தை உண்டாக்க வேண்டாம்” என எதிர்க்கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பட்டியலில் தங்கள் பெயர் இல்லாதவர்களும் வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்தை நாடலாம் என்றும் வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநிலதில் நீண்ட காலமாக ஆறு தடுப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக கூறும் தில்லியில் இருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு சென்று பணியாற்றும் பல அரசு சாரா அமைப்புகள், அங்கு குறைந்தது 1,900 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

அசாம்

தடுப்பு மையங்களில் 1900க்கும் அதிகமானோர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்

அஸ்ஸாம் சட்டமன்றத்தில் எழுப்பட்ட கேள்வி ஒன்றுக்கு வழங்கப்பட்ட பதிலின்படி, வெளிநாட்டில் வந்திருக்கும் மக்களில் 950க்கும் அதிகமானவர்கள் பெண்கள்.

வெளிநாட்டை சேர்ந்தவர் என்று கூறப்பட்ட ரஷ்மீனார் பேகம், கர்ப்பமாக இருந்தபோதும் மையத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட செய்தி பல பத்திரிகைகளில் வெளியானது.

பிரபல பத்திரிகையான கார்வா தனது ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகிறது: ‘அசாமில் நடைபெறும் செயல், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் கடுமையான குடியேற்ற கொள்கையைப் போல இருக்கிறது, இங்கும் சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுகிறார்கள், குழந்தைகள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்படுகின்றனர்’.

டெல்லியில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் அசாமை சேர்ந்த பி.பி செளத்ரியின் கருத்துப்படி, என்.ஆர்.சி பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களில் அதிகமானவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

அசாம்

இதுதொடர்பாக தங்களுக்கு நோட்டிஸ் எதுவும் வரவில்லை என்று கூறும் பாதிக்கப்பட்ட மக்கள், சிலருக்கு கிடைத்தாலும் அது கால தாமதமாக கிடைப்பதாகவும் கூறுகின்றனர். பலருக்கு எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அவர்களை கைது செய்யப்படும்போதுதான் இந்த விவரமே தெரிய வருவதாக கூறப்படுகிறது.

அஸ்ஸாம் மாநில அரசின் தரவுகளின்படி, மாநிலத்தில் ‘சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள்’ பிரிவில் 2.4 லட்சத்திற்கு அதிகமானவர்கள் உள்ளனர்.

மாநிலத்தில் இந்தியக் குடிமக்களாக இல்லாத ‘சந்தேக நபர்களை’ கண்காணிப்பதற்காக எல்லை போலீஸ் பிரிவும் உள்ளது. இந்த பிரிவு சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தமுடியும், வெளிநாட்டினருக்கான தீர்ப்பாயத்திற்கு செல்லும் வழக்குகளில் பெரும்பான்மையானவை எல்லை போலீசாரால் பதிவு செய்யப்படுபவை என்பதை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அஸ்ஸாமில் மட்டும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஏன்?

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில், அஸ்ஸாமிகள் மற்றும் அஸ்ஸாமியர்கள் அல்லாதவர்கள் என்ற பிரச்சனை இப்போது தோன்றியதில்லை. பல தசாப்தங்களாக தொடர்வது. 70களில் இதுதொடர்பாக பெரிய அளவிலான போராட்டங்கள் நடைபெற்றன.

அனைத்து அஸ்ஸாம் மாணவர் ஒன்றியம் (AASU) மற்றும் அனைத்து அஸ்ஸாம் கன சங்கம் பரிஷத் (AAGSP) தலைமையில் அசாம் கிளர்ச்சி இயக்கம், மாநிலத்தில் வசிக்கும் சட்டவிரோத குடியேறிகளை கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டங்களை முன்னெடுத்தன.

லட்சக்கணக்கான மக்களின் உயிரையும் பறித்த இந்த போராட்டங்களில், 1983 ஆண்டு நடைபெற்ற நெல்லி படுகொலையை சுலபமாக மறந்துவிடமுடியாது. ஒரேயொரு மாவட்டத்தில் மட்டும் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது மூவாயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், ‘சட்டவிரோதமாக அசாமிற்குக் குடிபெயர்ந்தவர்களை வெளியேற்றும் நோக்கத்திலான ஒப்பந்தத்தில்’ 1985ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கையெழுத்திட்டார்.

அசாம்

பெருமளவிலான வங்கதேச மக்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறியது தொடர்பாக அந்த மாநிலத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக மத்திய – மாநில அரசுகள் மற்றும் கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர் அமைப்புகளுக்கும் இடையே 1985இல் உடன்படிக்கை ஏற்பட்டது.

அந்த உடன்படிக்கையின்படி 1971 மார்ச் 24 நள்ளிரவுக்குப் பிறகு, மாநிலத்தில் குடியேறுபவர்கள் ‘சட்டவிரோத வெளிநாட்டவர்’ என்று அறிவிக்கப்படுவார்கள். இது இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெறுவதற்கு முதல்நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் பணி 2010 இல் துவங்கியது. அந்த காலகட்டத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது தருண் கோகொய் தலைமையிலான காங்கிரஸ் அரசு.

தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம், முதலில் ஒரு பூர்வாங்க ஆய்வுத் திட்டமாக இரண்டு மாவட்டங்களில் மட்டுமே தொடங்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக நடைபெற்ற வன்முறைகளும், அதில் ஆறு பேர் கொல்லப்பட்டதையும் அடுத்து திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

பிறகு 2015ஆம் ஆண்டில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இந்த பதிவேடு பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோ, முட்டுக்கட்டை போடும் முயற்சிகளிலோ ஈடுபடக்கூடாது என்று அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோய் கூறுகிறார்.

அசாம்

தற்போது திட்டப்பணிகள் முழுமையாக முடியாத நிலையில், பிரச்சனையை இந்து-முஸ்லிம் பிரச்சனையாக மடை மாற்றுவது தவறு என்றும் அவர் கூறுகிறார்.

இந்த விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியல் நடத்துவதாக பா.ஜ.க மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் அந்த கட்சியினர், நாட்டின் பாதுகாப்புக்கும்ம், இந்திய குடிமக்களின் உரிமைகளையும் இணைக்கும் முயற்சி இது என்று கூறுகின்றனர்.

யுனைடட் அகெய்ன்ஸ்ட் ஹேட் (United Against hate) என்ற அரசுசாரா அமைப்பு, அசாம் குடிமக்கள் பதிவேடு பற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறுகிறது: ‘பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். போன்றவை தேசிய குடிமக்கள் பதிவேடு பற்றி பரவலாக பேசப்படவேண்டும் என்று விரும்புகின்றன’

‘அப்போதுதான் அசாம் மாநிலத்திலும் இந்துத்வா என்ற துருப்புச்சீட்டை பயன்படுத்தமுடியும் என்று கருதுகின்றன. அதேபோல் பத்ருதீன் அஜ்மலின் ‘அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி’ கட்சி (All India United Democratic Front) முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்டு அரசியல் நடத்தும்.’ என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது. -BBC_Tamil

TAGS: