தோண்ட தோண்ட வெளிவரும் கல்வி நிறுவன ஊழல்கள்… அதிர்ச்சியில் கல்வியாளர்கள்

சென்னை: பேராசிரியர் நியமனம், விடைத்தாள் திருத்தம், விடைத்தாள் மறுகூட்டல், தோல்வி அடைந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்தல் என அனைத்திலும் தோண்ட தோண்ட ஊழல்கள் வெளியே வருவது கல்வியாளர்களை அதிர வைத்துள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களும் தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் நேர்மையாக படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களும், நன்கு படித்த பேராசிரியர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கல்வி என்பது வியாபாரமாகிவிட்டது. அதாவது காசு கொடுத்தால்தான் கல்வி என்ற நிலை உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் கல்வித் துறையிலேயே ஊழல் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றாக வெளி வருவதை பார்க்கும் போது மக்களும் கல்வியாளர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.

என்னென்ன ஊழல்கள்

பேராசிரியர்களை நியமனம் செய்வது, விடைத்தாள் திருத்தம் செய்வது, விடைத்தாள் மறுகூட்டல், தோல்வி அடைந்த மாணவர்களையும் மறுகூட்டல் என்ற பெயரில் தேர்ச்சி பெற வைப்பது என அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இது போதாக்குறைக்கு சில பேராசிரியர்கள் தாங்கள் வளமாக வாழ்வதற்கு சில மாணவிகளை உயரதிகாரிகளின் படுக்கையை பங்கிட்டு கொள்ள அனுப்பி அவர்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகின்றனர்.

பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்

ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புதல், தொலைதூர படிப்பு மையங்களுக்கு ஒப்புதல் அளித்தல், டெண்டர்களை முடிவு செய்தல், புதிய கல்லூரிகள் மற்றும் பாடப்பிரிவு தொடங்குவதற்கு ஒப்புதல் அளித்தல், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல் என சிண்டிகேட் குழுதான், பல்கலையில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சிண்டிகேட் குழுவிலும் விதிமுறை மீறல் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

பேராசிரியர் நியமனத்தில் ஊழல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 27 பணி நியமனங்களில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவு தொடங்க அங்கீகாரம் வழங்குவதில் அப்பட்டமான விதிமுறை மீறல்கள் இருந்ததாக குற்றம்சாட்டப்படுகின்றன.

கோவையிலும் ஊழல்

பேராசிரியர் நியமனத்துக்கு கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ரூ. 30 லட்சம் வரை லஞ்சம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு பேராசிரியரும் கைது செய்யப்பட்டனர்.

நிர்மலாதேவி

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவிகளை மதுரை பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். இதுபோல் தன்னுடைய காரியங்களை சாதிப்பதற்காக மாணவிகளை தவறாக பயன்படுத்தும் ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

மறுகூட்டலில் முறைகேடு

சென்னை அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் முறைகேட்டில் 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டு முறைகேடு நடந்து இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தெரிவித்தனர். இதில் 2015-2018 வரை தேர்வுக்கான கட்டுப்பாட்டாளராக இருந்த ஜி.வி.உமாவை கைது செய்தனர். இதுபோல் தோண்ட தோண்ட வெளி வரும் ஊழல்களால் கல்வியாளர்களும் பெற்றோரும் கலங்கியுள்ளனர்.

tamil.oneindia.com

TAGS: