அஸ்ஸாம் தேசிய குடியுரிமை பதிவேடும் இந்திய நாடாளுமன்றமும்

அஸ்ஸாம் மாநிலத்தில், வெளியிடப்பட்டுள்ள தேசியக் குடியுரிமை வரைவு பதிவேடு (National Register of Citizens) இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியும் ஆக்ரோஷமாக வாதிட்டுக் கொண்டிருக்கையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ “இரத்த ஆறு ஓடும்” என்று அறிவித்துப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மக்களை, அஸ்ஸாம் தேசிய குடியுரிமை வரைவு பதிவேடு, பெருமளவில் பாதித்திருப்பதாகவும் அறிவித்து, “பா.ஜ.கவை ஆட்சிக் கட்டிலில் இருந்து நீக்குவதே, என் ஒரே நோக்கம்” என்று ஆவேசப்பட்டிருக்கிறார் முதலமைச்சர் மம்தா. அவருக்குத் துணையாக காங்கிரஸ் கட்சியும் இந்தத் தேசியக் குடியுரிமைக் பதிவேட்டை எதிர்த்துப் பேசத் தொடங்கியிருக்கிறது.

30.7.2018 அன்று வெளியிடப்பட்டுள்ள அஸ்ஸாம் மாநில தேசியக் குடியுரிமை வரைவு பதிவேட்டின்படி, சுமார் 28.9 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்; நான்கு மில்லியனுக்கும் மேற்பட்டோர் நீக்கப்படுகிறார்கள். இந்த நீக்கம்தான், இப்போது எழுந்துள்ள இப்படியொரு களேபரத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.

அந்த நான்கு மில்லியனில், சுமார் 3.7 மில்லியனுக்கும் அதிகமானவர், குடியுரிமைப் பதிவேட்டில், தங்களை இணைத்துக் கொள்ளக் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள், நிராகரிக்கப்பட்டு விட்டன என்றே சுட்டிக்காட்டியுள்ளனர்.

பா.ஜ.கவுக்கு எதிரான பிரசாரத்துக்குத் தீனி போட்டிருக்கும் இந்தத் தேசிய குடியுரிமைப் பதிவேடு விவகாரம், எதிர்வரும் நாட்களில், இன்னும் விஸ்வரூபம் எடுக்கப்போகின்றது என்பது, இப்போதே தெரிகிறது.

அஸ்ஸாம் சட்டமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலின் போது, சட்ட விரோத குடியேற்ற விவகாரத்தை, பா.ஜ.க தேர்தல் பிரசாரமாக்கி வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குப் பிறகு, மத்தியிலும் அஸ்ஸாம் மாநிலத்திலும் பா.ஜ.க ஆட்சி நடைபெறுவதால், இந்தக் குடியுரிமைப் பிரச்சினை, இப்போது 2019 தேர்தல் பிரசாரத்துக்கான எதிர்க்கட்சிகளின் கருவியாக மாறியிருக்கிறது.

அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தமட்டில், வெளிநாட்டவர் குடியேற்றம் என்பது, ‘நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த பிரச்சினை’ அல்ல. 1950களில் அங்கு ஏற்பட்ட மதக் கலவரங்களின் போது, இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க, ‘நேரு- லியாகத்’ ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் மூலம், முதற்கட்டமாக இந்தப் பிரச்சினைக்குச் சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனாலும், வெளிநாட்டவர் பிரச்சினை, அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை நீரு பூத்த நெருப்பாகவே தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து, அஸ்ஸாம் மாநிலத்துக்குள் நுழைந்தவர்கள், இந்தியாவில் நடைபெறும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஆரம்ப காலத்திலிருந்தே  வருகிறது.

1979இல் மாங்கல்டாய் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியாக இருந்த ஹிராலால் பட்வாரி இறந்ததால், அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அந்த இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில், வெளிநாட்டவர் இடம்பெற்றுள்ளார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைத்துத்தான் முதல் போராட்டம் தொடங்கியது. அந்தப் போராட்டம், 1979 – 1985 வரை நடைபெற்ற ‘அஸ்ஸாம் போராட்டத்தின்’ அச்சாணியாக விளங்கியது.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது உருவானதுதான் ‘அஸ்ஸாம் ஒப்பந்தம்’. 15.8.1985 அன்று, அஸ்ஸாம் மாணவர்கள் சங்கம், இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் அஸ்ஸாம் மாநில அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையில் ஏற்பட்ட அந்த முத்தரப்பு ஒப்பந்தம், அஸ்ஸாம் போராட்டத்துக்கு முடிவு கட்டியது.

அதன் அடிப்படையில்தான், இந்தத் தேசிய குடியுரிமைப் பதிவேட்டுச் சர்ச்சை இப்போது தொடங்கியிருக்கிறது.

அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் முக்கிய உடன்படிக்கைகளில் ஒன்றுதான், ‘அஸ்ஸாம் மாநிலத்தில், சட்டவிரோதமாக உள்ள வெளிநாட்டவரைக் கண்டுபிடித்து வெளியேற்றுதல்’ என்ற முக்கிய ஷரத்துக் காணப்படுகிறது. அதே உடன்பாட்டில், ‘சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும், அப்படி நீக்கப்பட்டவர்கள், ‘வெளிநாட்டவர்’ சட்டத்தின் அடிப்படையில், அந்தந்த மாவட்டங்களில் விண்ணப்பிக்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் நீக்கப்பட்ட திகதியிலிருந்து பத்து வருடங்கள் கழித்து, மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்’ என்றும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆகவே, அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில், இப்போது தேசிய குடியுரிமை வரைவுப் பதிவேட்டில் இடம்பெறாதோர் அனைவரும், வெளியேற்றப்படுவார்கள் என்பது அர்த்தமல்ல என்பதே அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் ஷரத்தாக இருக்கிறது.

ஆனால், இந்தச் சரத்துகள் குறித்து எதிர்க்கட்சிகளோ, காங்கிரஸ் கட்சியோ வாய் திறக்காமல், நான்கு மில்லியன் பேர் நீக்கப்படுகிறார்கள் என்ற முக்கிய குற்றச்சாட்டை முன் வைத்து, “இது இந்துத்துவா அரசியல்” என்று காங்கிரஸும், “நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினை” என்று பா.ஜ.கவும் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆளுங்கட்சியாக இருக்கும் பா.ஜ.கவின் மீது குற்றம் சுமத்துவதில் மட்டும் குறியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி, தேர்தல் களத்துக்குப் போகப் போகும் பதற்றத்தில், அக்கட்சியின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி போட்ட ஒப்பந்தத்துக்கு எதிராகவே பேசி வருகிறது.

“காங்கிரஸ் கட்சி, தான் போட்ட ஒப்பந்தத்துக்கு விரோதமாகவே பேசி வருகிறது” என்று பா.ஜ.கவின் அகில இந்திய தலைவர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் மீது கடும் தாக்குதல் தொடுத்தார். நிலை தடுமாறிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் பேசிய குலாம் நபி ஆசாத், “தேசிய குடியுரிமைப் பதிவேட்டுக்கு காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால், அது அஸ்ஸாம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸின் விருப்பம்” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமைப் பதிவேடு, அஸ்ஸாம் மாநிலத்தைப் பொறுத்தவரை, முதல் முறையாக 1951இல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு, 2018இல் வரைவுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட 67 வருடங்களாகவும் அஸ்ஸாம் மாநிலத்தில் குடியேறியுள்ள வெளிநாட்டவர் பிரச்சினைக்கு, ஒவ்வோர் அரசும் போராடிக் கொண்டுதான் இருந்தது.

ஆனால் இந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளாலும், அஸ்ஸாம் மாநில மக்களின் கோரிக்கைகளாலும் ஒரு வழியாக 2015இல் தொடங்கிய, தேசிய குடியுரிமை வரைவுப் பதிவேடு தயாரிக்கும் பணி, பல்வேறு ஆய்வுகளைக் கடந்து, இப்போது வரைவுப் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள், ஆய்வு செய்து, அதற்குரிய மனுக்களைத் தாக்கல் செய்வதற்குக் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓகஸ்ட் 30 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 30ஆம் திகதிக்குள் அவ்வாறு மனுக்களைத் தாக்கல் செய்து விட வேண்டும்.
உச்சநீதிமன்றமே, விடுபட்டவர்களுக்குரிய மேல்முறையீட்டு முறை பற்றிய விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, ஓகஸ்ட் 16ஆம் திகதிக்கு வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் தேசிய குடியுரிமைப் பதிவேடு விவகாரத்தில், அனைவருக்கும் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. குறிப்பாக, “அஸ்ஸாம் மாநிலத்தவர் ஒருவர்கூட விடுபட்டுப் போக மாட்டார்” என்ற உறுதியை, அம்மாநில ஆளுநர் வழங்கியிருக்கிறார்.

நான்கு மில்லியன் பேர் நீக்கம் தொடர்பான வழிகாட்டுதலை, உச்சநீதிமன்றமும் வருகின்ற ஓகஸ்ட் 16 ஆம் திகதி உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஸ்ஸாம் தேசிய குடியுரிமைப் பதிவேட்டு விவகாரம் மற்ற மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் திடீரென்று, பீஹார் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து, தமிழ்நாட்டில் குடியேறியிருப்போர் பற்றிக் கணக்கு எடுக்க வேண்டும் என்று, குரல் எழுப்பியிருக்கிறார் பா.ஜ.கவின் தேசியச் செயலாளர்களில் ஒருவரான எச் ராஜா.

ஆனால், அஸ்ஸாமில் ஏற்படப் போகும் 67 வருடகாலப் பிரச்சினைக்கான, தீர்வு பாரதிய ஜனதாக் கட்சியினர் கூறுவது போல், ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவாகவே அமையும் என்பதில் சந்தேகமில்லை.

-tamilmirror.lk

TAGS: