கடந்த வருடம் சிலைக்கடத்தல் பிரிவு ஐ.ஜி. ஆக பொறுப்பேற்றார் பொன்மாணிக்கவேல். தமிழகம் முழுவதும் பல்வேறு கோவில்களில் திருடப்பட்ட சிலைகள் குறித்த தகவல்கள் வெளியே வந்து, திருடியவர்கள், துணைபோனவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டு மெல்ல மேலிடங்களின் பெயர்கள் அடிபட தொடங்கிய நிலையில் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்படும் என அறிவித்துள்ளது அரசு. அரசு சொன்ன காரணங்களில் ஒன்று ஐ.ஜி. பொன்.மாணிக்கவேலின் செயல்பாட்டில் திருப்தி இல்லையென்பது. அது உண்மைதானா?
2017 செப்டம்பர்
திருவண்ணாமலையில் ரூ.10 கோடி மதிப்புள்ள 6 சிலைகள் மீட்கப்பட்டு 7பேர் கைது செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 3 சிலைகளை திருடியதில் டிஎஸ்பி காதர்பாஷா மற்றும் உதவி ஆய்வாளர் சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
2017 அக்டோபர்
காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரத்தில் சுமார் 600 ஆண்டு பழமையான சுந்தரமூர்த்தி நாயனார் சிலை கடத்தப்பட்டது. அதை மீட்ட காவல்துறை 4 பேரை கைது செய்தது. இந்த சிலையின் மதிப்பு ரூ.2.35 கோடி. இந்த சிலை உத்திரமேரூர் பகுதியிலுள்ள ஒரு சிவன் கோவிலுடையது.
2017 நவம்பர்
தஞ்சாவூர் மாவட்டம், பந்தநல்லூர் பசுபதீசுவரர் கோவிலிலிருந்த மாணிக்கவாசகர் சிலை மீட்கப்பட்டது, சிலை கடத்திய 3பேர் கைது செய்யப்பட்டனர். ஈரோட்டில் பச்சைக்கல் சிவலிங்க சிலை மீட்கப்பட்டு, 3 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சிலையின் மதிப்பு ரூ.5 கோடி.
2017 டிசம்பர்
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடனையில் கடத்தப்பட்ட விநாயகர் சிலையை மீட்ட காவல்துறை 3பேரை கைது செய்தது. அந்த சிலையின் மதிப்பு ரூ.3 கோடி.
2018 ஜனவரி
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கோவிலில் ரூ.10 கோடி மதிப்புள்ள 2 துவார பாலகர்கள் கடத்தப்பட்டது. இதை மீட்டு 5 பேரை கைது செய்தது காவல்துறை. வேலூர் மாவட்டத்தில் கடத்தப்பட்ட ரூ.50 இலட்சம் மதிப்புள்ள விநாயகர் சிலையை மீட்டு, 3 பேரை கைது செய்தனர்.
2018 பிப்ரவரி
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன் கோவிலில் 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வெள்ளிப்பல்லக்கை மீட்டு 4 பேரை கைது செய்தனர்.
2018 மார்ச்
பழனி முருகன் கோவிலில் ஐம்பொன் முருகன்சிலை செய்ததில் ரூ.1.31 கோடி மோசடி நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஸ்தபதி முத்தையா, கோவில் செயல் அலுவலர் ராஜா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
2018 மே
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டிலிருந்த 3 சிலைகள் கடத்தப்பட்டு, விற்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.25 இலட்சம். இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், பெரிய கோவிலிலிருந்த ராஜராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதா உருவ சிலைகள் குஜராத்திலிருந்து மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 150 கோடி. இந்த சிலை கடத்தப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமின்றி திரிபுரத்தான் பிரகதீஸ்வரர் கோயிலிலிருந்த 8 சிலைகள் கடத்தப்பட்டதைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலிய நாட்டின் கேன்பரா நகரத்தில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஒரு சிலையை கண்டுபிடித்தார். அதன் மதிப்பு 31 கோடியே 80 லட்சம்.
2017ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் விசாரணை நடவடிக்கை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் கிட்டத்தட்ட 300 கோடி மதிப்பிலான சிலைகளை மீட்டுள்ளார். பலரை கைது செய்துள்ளார். வெளிநாட்டிலுள்ள சிலைகளையும் கண்டறிந்துள்ளார். ஆனாலும் அரசு சிறப்பாக செயல்படவில்லை, நம்பிக்கையில்லை, அரசுக்கு தெரிவிக்கவில்லை இப்படியெல்லாம் கூறிவருகிறது. பெரிய அரசியல் தலைகள் இக்கடத்தல் விவகாரத்தில் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள், அதனால்தான் இதை சி.பி.ஐ.க்கு மாற்றி காலம் கடத்த பார்க்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில் அவரது செயல்பாடுதான் திருப்திகரமாக இல்லையா அல்லது உங்கள் செயல்பாடுகளெல்லாம் தெரிந்துவிடும் என்று பயப்படுகிறீர்களா? மக்களுக்கு விடை தெரியும். அது ஆளுகின்ற கட்சிக்குத் தெரியவேண்டும்.
-nakkheeran.in