சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு.. 14 மாவோயிஸ்ட்டுகள் பலி

சுக்மா: சட்டீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 மாவோயிஸ்ட்டுகள் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரிலிருந்து 390 கி.மீ. தொலைவில் உள்ள சுக்மா மாவட்டத்தில் கொள்ளபள்ளி மற்றும் கொண்டா என்ற வனப்பகுதி உள்ளது. இது மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதி. அதனால், சுக்மா மாவட்ட பாதுகாப்பு படையினரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று காலை சுக்மா மாவட்டம், கொள்ளபள்ளி மற்றும் கொண்டா பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கே மறைந்திருந்த 200க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பதிலுக்கு சிறப்பு அதிரடி படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கூட்டாக சேர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 14 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் இன்னும் யாரேனும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மறைந்திருக்கிறார்களா என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் தேடி வருகின்றனர்.

இந்த முறை மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு எதிராக புதிய தாக்குதல் உத்தியை பின்பற்றியதாகவும் அது வெற்றி பெற்றுள்ளது என்று மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பாதுகாப்பு படைவீரர்களை அச்சுறுத்தியதாகவும் அவர்கள் ஒவ்வொரு முறையும் உயர் தொழில் நுட்ப வெடிகுண்டுகளை பயன்படுத்தியதாகவும் பாதுகாப்பு படை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு, கடந்த ஜூலை மாதம் சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 8 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.oneindia.com

TAGS: