கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு.. அடுத்த 24 மணி நேரம் முக்கியம்: காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை: கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கையை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, கடந்த மாதம் 28ம் தேதி நள்ளிரவில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதிக்கு பத்தாவது நாளாக இன்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடைசியாக ஜூலை 31ம் தேதி, காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது கல்லீரல் நோய் தொற்று, தொடர்பாக சில சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், வயது முதிர்வு காரணமாகவும், சில நாட்கள் கருணாநிதி மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்பிறகு 6 நாட்களாகியும் இன்னும் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை பற்றி, அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலையில் இன்று காலை பின்னடைவு ஏற்பட்டதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அளித்த பேட்டி திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்படுவதும், சிகிச்சைக்கு பிறகு சீராக்கப்படுவதும் கடந்த சில நாட்களாகவே இருக்கும் நிலைதான் என்று, திருநாவுக்கரசர் கூறினார்.

இருப்பினும், கருணாநிதி உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள திமுக தொண்டர்களும், தமிழக மக்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த நிலையில், இரவு 6.30 மணியளவில் காவேரி மருத்துவமனை சார்பில், கருணாநிதி உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், வயோதிகம் காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருணாநிதிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு கொடுக்கப்படும் சிகிச்சைக்கு அவர் உடல்நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை வைத்தே அடுத்தகட்ட சிகிச்சை இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: