பொன் மாணிக்கவேல் இத்தனை கிடுக்கிப்பிடி போட்டும் கடத்தல்காரர்கள் அட்டகாசம் குறையலை பாருங்க

சென்னை: மதங்களின் பின்னணியில் அதன் கோட்பாடுகளையும், கொள்கைகளையும் புனிதமாக நினைக்ககூடிய மக்கள் கோடானுகோடி பேர். அதனடிப்படையிலேயே மதங்களை சார்ந்த கலைப்பொக்கிஷங்களும் காலகாலத்துக்கும் மதிக்கப்பட்டு, மரியாதைக்குரியதாக வணங்கப்பட்டு வருகிறது.

ஆனால் “கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது” என்று சொன்ன வசனம் நிரூபணமாக தொடங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே கோயிலின் கலைச்செல்வங்களான சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது வெட்ட வெளிச்சமாகியவுடன் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வழக்குகளை விசாரிக்கட்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கைது நடவடிக்கைகள்

அதிரடி தொடங்கியது… வேட்டை விறுவிறுப்பானது.. நாடு கடத்தப்படும் சிலைகளும், சர்வதேச அளவில் இந்த குற்றங்களை செய்தவர்களும் ஒன்றன் பின் ஒருவராக கைதாக தொடங்கினர். தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும் என்பார்களே… அதுபோல பொன்.மாணிக்கவேலுவின் கைது நடவடிக்கைக்கு தடைகள் பல ரூபத்தில் வந்தன…

ரூ.ஒரு லட்சம் கோடி

அப்பழுக்கற்றவர் யாராக இருந்தாலும், நேர்மையானவர்கள் யாராக இருந்தாலும் இடையூறுகளும், வயிற்றெரிச்சல்களும் வந்து விழத்தானே செய்யும். பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்த கொள்ளைகள் ஒவ்வொன்றும் ஓரிரண்டு வருடங்கள் நடைபெற்ற கடத்தல்கள் அல்ல.. அவை கிட்டத்தட்ட 50 ஆண்டுகாலம் வேரூன்றி இருந்த கடத்தல்கள்.. பலமாக பின்னணியின் அஸ்திவாரத்துடன் நடைபெற்ற கடத்தல்கள்… அதில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. அதனால்தான் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றிவிட துடித்து கொண்டிருக்கிறார்கள்.

100 பேர் முன்பு சோதனை

ஏன் இவ்வளவு துடிப்பு… பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்படவில்லையா என்ன? இதோ நேற்றுகூட போரூர் பகுதியில் சிலை கடத்தப்படுவதாக தகவல் கசிந்தது. சென்னை போரூர் காரம்பாக்கம் அருகே நேற்று நானோ காரில் தாலிக்கொடியுடன் கூடிய ஒன்றே முக்கால் அடி அம்மன் ஐம்பொன் சிலையை கடத்த உள்ளதாக மத்திய சிறைச்சாலையில் இருந்து பொன்மாணிக்கவேலுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மூன்று ஆட்டோக்களில் 9 பேர் கொண்ட விசாரணைக் குழு காரை வளைத்துப் பிடித்தது. பின்னர் குமரன் என்ற வங்கி ஊழியரை வைத்து பொதுமக்கள் 100 பேர் முன்னிலையில் சோதனை செய்தனர்.

ரூ.50 லட்சம் விற்பனை?

சோதனையில் காரில் சுமார் 20 கிலோ எடை கொண்ட தாலிக்கொடியுடன் கூடிய ஒன்றே முக்கால் அடி அம்மன் ஐம்பொன் சிலையை கடத்த வைத்திருந்தது தெரியவந்தது. சிலையை மீட்டு காரில் வந்த 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் விசாரணையில் திருடப்பட்ட அம்மன் சிலையை 50 லட்சம் ரூபாய்க்கு விற்பதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த ஐம்பொன் அம்மன் சிலை திருவள்ளூர் பகுதியில் சுற்றியுள்ள கோவில்களில் வழிப்பாடிலிருந்து திருடப்பட்ட அம்மன் சிலை என்று தெரியவந்தது.

அதிகாரம் தரப்பட வேண்டும்

இது தொடர்பாக 4 பேரையும் அந்த நிமிடமே கைது செய்தார் பொன்.மாணிக்கவேல். இப்படி இந்த கடத்தல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. பொன் மாணிக்கவேல் இத்தனை தீவிரமாக இருந்தும் கூட சிலைக் கடத்தல் தொடர்கிறது என்றால் அவரது விசாரணை வளையம் விரிவடைய வேண்டும், மேலும் கடுமையான அதிகாரங்கள் அவர் கையில் கொடுக்கப்பட வேண்டும் என்பதையே இந்த போரூர் சம்பவம் உணர்த்துவதாக உள்ளது.

tamil.oneindia.com

TAGS: