டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து நாளை நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும், தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும். மத்திய அரசின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி சென்னையில் இன்று மாலை உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவித்திருந்தது.
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மூத்த தலைவர் கருணாநிதியின் மறைவையடுத்து, நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதையடுத்து நாடு முழுவதும் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும். மத்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதைத் தவிர அரசு மரியாதையுடன், கருணாநிதியின் உடல்அடக்கம் நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.