கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அடக்கம்

21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் திமுகவின் தலைவர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டது.

ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சந்தன பேழையில் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி

கருணாநிதியின் உடம்பில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

மெரினா கடற்கரையில் கருணாநிதி உடல் அடக்கம்

கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழக அமைச்சர் ஜெயகுமார், திருமாவளவன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.

கருணாநிதி

ஸ்டாலின் உள்ளிட்ட கருணாநிதி குடும்ப உறுப்பினர்களும், திமுக பொதுச் செயலாளரும், கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான க.அன்பழகன் உள்ளிட்ட திமுக மூத்த உறுப்பினர்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மெரினா கடற்கரையில் கருணாநிதி உடல் அடக்கம்

பொது மக்கள் அஞ்சலி செலுத்த ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடல், அங்கிருந்து சிவானந்தா சாலை வழியாக, தந்தை பெரியார் சிலையை கடந்து, அண்ணா சிலை வந்தடைந்து, அங்கிருந்து வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் மாலை 7 மணியளவில் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதி உடல் மெரினா கடற்கரையில் அடக்கம்

வழிநெடுகும் மக்கள் கூட்டம் அலைமோதியதால் மாலை சுமார் 4 மணிக்கு புறப்பட்ட ஊர்வலம் 6 மணியளவில் மெரினாவை வந்தடைந்தது.

முன்னதாக கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய வேண்டும் என ஸ்டாலின் கையெழுத்திட்ட மனு ஒன்றை திமுகவினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடியிடம் வழங்கினர். அதற்கு பதில் அளித்த தமிழக அரசு, சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தது.

எனவே இதுகுறித்து திமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு நள்ளிரவில் விசாரிக்கப்பட்டது.

தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், எஸ்.எஸ். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது.

மெரினா கடற்கரையில் கருணாநிதி உடல் அடக்கம்

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது

உடல் நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சுமார் 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் செவ்வாய்க்கிழமை, மாலை 6.10 மணியளவில் காலமானார். -BBC_Tamil

TAGS: