சென்னை: கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை மீண்டும் சூடுபிடித்துள்ளது. இதனால் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று முதல் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
கபினியில் இருந்து 70000 கஅ
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டித்தீர்க்கும் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கபினி அணையில் இருந்து காலையில் தமிழகத்திற்கு வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
கேஆர்எஸ் அணையும் திறப்பு
இந்நிலையில் கர்நாடக அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால் திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலையில் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து விநாடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு 55,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
1.25 லட்சம் கன அடி திறப்பு
இதனால் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு 1.25 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் கொட்டித்தீர்த்த கனமழையால் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை விறுவிறுவென நிரம்பியது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதன் காரணமாக காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கபினி அணையில் தற்போது அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
32வது நாளாக தடை நீடிப்பு
இதனிடையே பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 90,000 கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க, பரிசல்கள் இயக்க 32ஆவது நாளாக தடை நீடிக்கிறது.
மேலும் அதிகரிக்கும்
மேட்டூர் அணையில் இருந்து 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. தமிழகத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.