40வது முறையாக மேட்டூர் அணையில் முழு கொள்ளளவு?

கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 1,43,000 கன அடி அளவுக்கு தமிழகத்திற்கான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியிலிருந்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 40வது முறையாக நிரம்பும் நிலையில் உள்ளது மேட்டூர் அணை.

கேரளா வயநாடு நீர் பிடிப்பு பகுதிகளில் பருவமழை அதிக அளவு பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கான நீர்வரத்து கடந்த இரண்டு தினங்களாக அசுர வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

மீண்டும் நிரம்பும் மேட்டூர் அணை – காணொளி

அதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 1,43,000 கன அடி அளவுக்கு தமிழகத்திற்கான உபரி நீர் திறக்கப்பட, ஒக்கேனக்கல் வழியாக தண்ணீர் வெள்ளிக்கிழமை அதிகாலை மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியுள்ளது.

மேட்டூர் அணை : 10 சுவாரஸ்ய தகவல்களை நீங்கள் அறிவீர்களா?

கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இந்த இரண்டு அணைகளும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கடந்த மாதமே உபரிநீர் காவிரியில் வெளியேற்றப்பட்டது.

இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து கடந்த மாதம் 23ஆம் தேதியன்று அணை நிரம்பியது.

40வது முறை மேட்டூர் அணையில் முழுகொள்ளளவு: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய நிலையில் கடந்த 2ம் தேதி முதல் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்ததால் அணையின் நீர்மட்டமும் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு தற்போது நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இந்த அணைகளில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியும், அதன் பிறகு நேற்று ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடியும் வெளியேற்றப்பட்டது. நேற்று முன் தினம் திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய தினமே மேட்டூர் அணையில் இருந்து உபரியாக 7,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. கர்நாடகவிலிருந்து தற்போது அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பதால் மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக உள்ளது. இதில் வினாடிக்கு சுமார் 10,000 கன அடி தண்ணீர் உபரி நீராக 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

40வது முறை மேட்டூர் அணையில் முழுகொள்ளளவு: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் தற்பொழுது 116.85 அடி அளவுக்கு குறைந்திருந்தாலும் கபினி அணையில் திறக்கப்பட்டுவரும் நீரின் அளவு இன்னும் அதிகரிக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை முதலே நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக அளவு அதிகரித்து தற்பொழுது வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டுவருகிறது.

வெள்ளிக்கிழமை இரவுக்குள் வெளியேற்றப்படும் நீரின் அளவு இன்னும் அதிகரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வினாடிக்கு 2,65,000 கன அடி அளவு தண்ணீர் இந்த ஆண்டும் திறப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,

தொடர்ந்து கேரளா பகுதிகளில் பருவமழை அதிகமாக பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து பல லட்சம் கன அடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

40வது முறை மேட்டூர் அணையில் முழுகொள்ளளவு: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

இந்தநிலையில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் ரோகிணி , காவிரியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கன அடி தண்ணீர் வர உள்ளது. அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளதால் பொதுமக்கள் மேடான பகுதிக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதியில் 6 இடங்கள் தாழ்வான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் அரசு அலுவலர்கள் முகாமிட்டுள்ளனர்.

அங்குள்ள மக்களை மேடான பகுதிக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருவாய் துறையினரை கொண்டு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதுடன், ஆங்காங்கே எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.85 அடி இருந்த நிலையில் விரைவில் 40வது முறையாக அணை மீண்டும் 120 அடி முழு கொள்ளாளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. -BBC_Tamil

TAGS: