எங்கெங்கும் மழை.. 3 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.. குளிர்ந்து மகிழ்கிறது தமிழகம்

சில மாவட்டங்களில் கன மழை, சில மாவட்டங்களில் மெல்லிய சாரல்கள், சில மாவட்டங்களில் சிலுசிலு என தேகங்களை தொட்டு செல்லும் குளிர்காற்று… என மாநிலம் முழுவதும் ஒரே குளுகுளுதான்.

கேரளா எதிரொலி

கேரளாவில் வெளுத்து கட்டி அம்மாநில மக்களை பாடாய் படுத்தி வருகிறது மழை. அதன் எதிரொலி தற்போது நம்ம ஊர்களிலும் தலைகாட்ட தொடங்கிவிட்டது. இதில் முக்கியமாகவும், முதலிலும் தாக்கம் தொடங்கியது நீலகிரி மாவட்டத்தில்தான். கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டதுடன், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சூறையில் முறியும் மரங்கள்

அதேபோல க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டியது. மலையோர பகுதிகள், கடலோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், என ஒரு இடம் விடாமல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் இங்கு வெள்ளக்காடாகவே மாறியுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது என்றாலும் சூறை காற்றினால் வாழை, தென்னை மரங்கள் முறிந்து முறிந்து விழுந்து வருகின்றன.

பேய்மழை

அடுத்ததாக தேனி. இங்கு பெய்த மழையை பேய் மழை என்றுதான் சொல்ல வேண்டும். தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மரங்கள் எல்லாம் பிரதான சாலையில் விழுந்துவிடவும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெகுவாகவே அவதிப்பட்டனர்.

சென்னையில் குளிர்ச்சி

அதேபோல கோவை மாவட்டத்தை சுற்றிலும் மழைதான். ஏற்கனவே கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி வால்பாறை, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை விடியற்காலையிலிருந்தே மழைதான். வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகரில் மழை பெய்துள்ளது.

3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

இப்படி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும், குமரி, நெல்லை, கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையில், தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள குமரி, கோவையில் மழை பெய்யும் எனவும், குமரி மாவட்டத்தில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளிர்ச்சியில் தமிழகம்

எப்படியோ சூட்டை கிளப்பும் அனல், மண்டைய பிளக்கும் வெயில், இரவெல்லாம் வியர்வை, புழுக்கம் போன்றவற்றிலிருந்து தமிழக மக்கள் வெளியேறி வந்துவிட்டார்கள். தற்போது மழையையும், அதன் குளிர்ச்சியையும் ரசிக்க தொடங்கிவிட்டார்கள். கூடவே மழை காரணமாக மின்தடையையும் வேறு வழியில்லாமல் அனுபவித்தும் வருகிறார்கள். தமிழகமே குளிர்ந்து காணப்படுவதால், மக்களின் மனமும் குளிர்ந்தே உள்ளது.

tamil.oneindia.com

TAGS: