கேரளா வெள்ளம்: பலி எண்ணிக்கை 37 ஆக உயர்வு.. தொடரும் மழை.. தொடரும் சோகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக இதுவரை 37 பேர் பலியாகி உள்ளனர். 150க்கும் அதிகமானோர் காணாமல் போய் உள்ளனர்.

கேரளா மாநிலம் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு கடந்த இரண்டு வாரமாக பெய்த கனமழையால் பெரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

நான்கு நாட்களாக அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளா மாநிலம் சந்தித்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

எத்தனை மாவட்டம்

கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள் உள்ளது. இதில் எல்லா மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. இடுக்கி, கோழிக்கோடு, கொல்லம், உள்ளிட்ட நதியோர பகுதிகளும், மலையோர பகுதிகளும் அதிக வெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளது.

மீட்பு பணி தீவிரம்

தற்போது மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் பகுதிகளை அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும், எதிர்கட்சி தலைவரும் சேர்ந்து சென்று பார்வையிட்டனர். வெள்ள பாதிப்பு பகுதிகளில் மத்திய மாநில அரசு படைகள் சேர்ந்து மீட்பு பணிகள் செய்து வருகிறது. 25 ஹெலிகாப்டர்கள் அங்கே மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

பலி

கேரளா வெள்ளம் காரணமாக தற்போது பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவு காரணமாகவும், நீரில் மூழ்கியது காரணமாகவும் இவ்வளவு மரணம் நிகழ்ந்துள்ளது. மேலும் 150க்கும் அதிகமானோர் வெள்ளத்தில் காணவில்லை. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மீட்பு முகாம்

கேரளா முழுக்க தற்போது 350 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 50,000 பேர் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். அரசு தரப்பில் இருந்தும், தமிழ்நாடு போன்ற வெளிமாநில தரப்பில் இருந்தும் கேரளா மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

tamil.oneindia.com

TAGS: