29 சிறுமிகள் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் நேர்மையான விசாரணை தேவை – ஆர்ப்பாட்டம் செய்த மகளிர்

பீகார் மாநிலத்தில் சிறுமிகள் காப்பகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையில் நம்பகத்தன்மையான, வெளிப்படையான நேர்மையான விசாரணை வேண்டும் என தமிழக மகளிர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தப் பெண்கள் இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

சமீபத்தில் பீகார் மாநிலம் முசாபூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றில், காப்பக நிர்வாகிகளால் மொத்தமுள்ள 44 சிறுமிகளில் 29 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும், மேலும் ஒரு சிறுமி கொலையுண்டு புதைக்கப்பட்டதும் வெளிச்சத்திற்கு வர இந்தியாவே பரப்பரப்பு அடைந்தது. அந்த காப்பகத்தில் மேலும் பிணங்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் நீதிபதி ப்ரியா ராணி மற்றும் சீனியர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் தோண்டப்பட்டது. சம்பவம் தொடர்பாக காப்பக அதிகாரிகள் உட்பட 11 நபர்களை மட்டும் கைது செய்த அம்மாநில காவல்துறை அத்துடன் தன்னுடைய நடவடிக்கையை நிறுத்திக்கொண்டது.

இதனைக் கண்டித்து அந்த நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், இதன் பின்னனியில் உள்ள அரசியல்வாதிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும் நம்பகத்தன்மையான, வெளிப்படையான நேர்மையான விசாரணை வேண்டும் என அமுதா சுரேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் தமிழக மகளிர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த மகளிர்கள்.

-nakkheeran.in

TAGS: