தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம்- ஹைகோர்ட் உத்தரவு

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் 100-ஆவது நாளான மே 22-ஆம் தேதி பொதுமக்கள் தூத்துக்குடி ஆட்சியரகத்துக்கு பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100 பேர் காயமடைந்தனர். இதனால் தூத்துக்குடியில் இணையதள சேவை உள்ளிட்ட தொலைதொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

யார் யார் இறந்தனர்

அவர்கள் ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்) , கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி) , கந்தையா (சிலோன் காலனி – தூத்துக்குடி), வெனிஸ்டா (17 வயது மாணவி) தூத்துக்குடி , தமிழரசன் – புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை – தூத்துக்குடி) , சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி) , அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி), மணிராஜ் தூத்துக்குடி , வினிதா (29), ரஞ்சித் குமார், கார்த்தி, லியோ ஜெயசீலன், ஸ்னோவிலின் ஆகிய 13 பேர் கொல்லப்பட்டனர்.

நீதிமன்றம் கேள்வி

இந்த துப்பாக்கிச் சூட்டில் 130 புல்லட்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி அளித்தது யார், பேரணி செல்ல மக்கள் திட்டமிடப்பட்டிருந்தது 15 நாட்களுக்கு முன் தெரிந்திருந்தும் அது குறித்து மக்களை அழைத்து ஏன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்பன உள்ளிட்ட சரமாரி கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.

சிபிஐக்கு மாற்றம்

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்க வேண்டும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.டி. செல்வம், பஷீர் அகமது கூறுகையில் துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்படுகிறது.

சிலை கடத்தல் வழக்கும் சிபிஐக்கு மாற்றம்

மேலும் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தில் நடந்துள்ள சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதனை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததுடன், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை விடுத்தது.இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் மனு மீது வரும் 17 ம் தேதி விசாரணை நடக்கும் என அறிவித்துள்ளது.

tamil.oneindia.com

TAGS: