முல்லைப் பெரியாறு நீர் மட்டம் 142 அடியை எட்டியது.. 139 அடியாக குறைக்க கேரளா கோரிக்கை

தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் உச்சநீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து கேரளாவில் நிலவும் வெள்ள அபாயத்தைக் கருத்தில் கொண்டு நீர்மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவில் கடந்த ஒரு மாதமாக பெரும் மழை பெய்து வருகிறது. அங்கு ஏற்பட்டு இருக்கும் வெள்ளம் கேரள வரலாற்றில் ஏற்படாத வெள்ளம் ஆகும். 14 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஒருவாரமாக பெய்த பெரிய மழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசியாவின் பெரிய ஆர்க் அணையான இடுக்கி அணை நிரம்பி, 26 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டுள்ளது. இதன் முழு உயரம், 2,403 அடியாகும். தற்போது மீண்டும் முழு அடியை இந்த அணை எட்டி இருக்கிறது. அங்கு பெய்யும் கனமழையால் இந்த அளவு தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது. தற்போது உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள அளவான 142 அடியை முல்லைப் பெரியாறு அணை எட்டியுள்ளது. இந்த நிலையில் கேரளாவில் வெள்ள நிலைமை மோசமாக இருப்பதால், நீர் மட்ட அளவை 139 அடியாக குறைக்குமாறு தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் நீரின் அளவைக் குறைப்பதால் கேரளாவுக்கு எந்தப் பயனும் ஏற்படாது என தமிழகத் தரப்பில் கூறப்படுகிறது. கேரளாவின் பக்கம் கட்டப்பட்டுள்ள சட்டவிரோதமான கட்டுமானங்கள் மூழ்கி விடாமல் தடுக்கவே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்படுவதாகவும், தண்ணீரைத் திறந்து விட்டாலும் கூட அது கேரளாவின் பக்கம்தான் மீண்டும் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே, முல்லைப்பெரியாரை ஒட்டிய தமிழக பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: