அளவுக்கு அதிகமாக திறக்கப்படும் நீர்.. நிரம்பி வழியும் ஆறுகள்.. வெள்ளக்காடான தமிழக கரையோரங்கள்!

சென்னை: தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து ஆறுகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரி, பாவானி, கொள்ளிடம் உள்ளிட்ட கரையோரப் பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.

கேரளம் மற்றும் கர்நாடகத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பிவிட்டன. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் காவிரி நீர் பாயும் அணைகளும், ஆறுகளும் நிரம்பிவிட்டன.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1,20,000 கன அடியும், கபினியில் 80 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் வெள்ளம்

கர்நாடக அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் சேரும் நீரையும் சேர்த்து ஒகேனக்கலில் 2.10 லட்சம் கன அடி நீர் பாய்கிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளின் கரையோரம் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஒகேனக்கல் போக்குவரத்து தடை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஒகேனக்கலை அடுத்த உத்தமலையில் இருந்து அஞ்சடி செல்லும் சாலைக்கு மேல் வெள்ளம் பாய்வதால் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லில் தடை

ஒகேனக்கல் அருவிகளில் தொடர்ந்து ஆர்பரித்து கொட்டும் வெள்ளத்தால் 40-வது நாளாக அங்கு பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பரிசல் சவாரிக்கு 8-வது நாளாக தடை தொடர்கிறது.

காவிரி கரையோரம்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 1.70 லட்சம் கனஅடியாக உள்ளது. இதனால் காவிரி கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருச்சி – கல்லணை சாலை

கல்லணையில் இருந்து வெளியேறும் நீர் தஞ்சாவூர் மாவட்டம் கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. கரைபுரளும் வெள்ளம் காரணமாக திருச்சி – கல்லணை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வெளியேற்றம்

இதேபோல் பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டம் பவானி கரையோர பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நிரம்பும் வைகை

கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் கரையோ மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் வைகை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை அணை மளமளவென நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேமிக்க இடமில்லை

தமிழகத்தில் உள்ள ஆறுகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி தமிழகத்தில் உள்ள ஆறுகள் அனைத்தும் நிரம்பி ஆர்ப்பரிக்கின்றன. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால் இந்த நீரை சேமித்து வைக்க திட்டங்கள் முறையாக இல்லாததால் பெருமளவிலான தண்ணீர் வீணாக கடலில் சேருவது வேதனை அளிக்கக்கூடிய விஷயம் என்பதை மறுப்பதற்கில்லை.

tamil.oneindia.com

TAGS: