கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததால் அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ். உள்பட பல்வேறு அணைகள் நிரம்பின. இதனையடுத்து அந்த அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டதால் நேற்று முன்தினம் தமிழகத்தின் காவிரி கரையோர பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1,70,800 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் 120.24 அடியாக இருந்தது.
அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் 16 கண் பாலம் வழியாக சீறிப்பாய்ந்தது. இதனை பார்க்க நேற்று அதிகளவில் மக்கள் அங்கு கூடினார்கள். மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் சேலம் மாவட்டம் கோனேரிப்பட்டி அக்ரஹாரம் பகுதியில் மணக்காடு கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளையும், மதிக்கிழான்திட்டு கிராமத்தில் 6 வீடுகளையும் சூழ்ந்தது.
இந்த பகுதியில் வசித்த மக்கள் பரிசல்கள் மூலம் வெளியேறினார்கள். பல இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்குள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது.
காவேரிப்பட்டி பரிசல்துறையில் உள்ள ராகு-கேது, பஞ்சமுக விநாயகர், கம்பத்தையன் கோவில் ஆகிய கோவில்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மேலும், காவேரிப்பட்டி அக்ரஹாரம் உள்ளிட்ட பல கிராமங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து சென்றதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. அங்கிருந்து காவிரியில் வினாடிக்கு 63 ஆயிரம் கன அடி தண்ணீரும், கொள்ளிடத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டது. இதனால் இந்த இரு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடல் போல் காட்சி அளிக்கிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையின் அனைத்து படிக்கட்டுகளும் தண்ணீரில் மூழ்கியதால் அங்கு இருந்த புரோகிதர்கள் வெளியேற்றப்பட்டனர்.
திருச்சி-கல்லணை சாலையில் உத்தமர் சீலி பகுதியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் இருந்த வாழைத்தோப்புகளும் தண்ணீரில் மூழ்கின.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் காவிரி வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 17 பேர் பரிசல் மூலம் மீட்கப்பட்டனர். வெள்ளத்தில் மூழ்கிய சில வீடுகளில் ஓடுகள் உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்தது.
ஈரோடு மாவட்டம் பவானி நகர பகுதியில் 600-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. பவானி அருகே உள்ள ஜம்பை, ஒரிச்சேரி ஆகிய பகுதிகளிலும் 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்காக 7 முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு அவர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் கரையில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அந்த வீடுகளில் இருந்தவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தனர். காவிரிக்கரையில் இருந்த ஒரு கோவிலையும் வெள்ளம் சூழ்ந்தது.
பள்ளிபாளையம் பகுதியில் நேற்று மேலும் சில வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஈரோட்டை அடுத்து உள்ள சாவடிப்பாளையம் காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.
ஈரோடு மாவட்டத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு வீரர்கள் 100 பேர் மாவட்டத்தில் முகாமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து சத்தியமங்கலம், பவானி, மொடக்குறிச்சி என 3 பகுதிகளில் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசாரும், தீயணைப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுகோட்டை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
காவிரி கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அந்ததந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், காவிரி கரையோர பகுதிகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
-dailythanthi.com