இந்த ஆண்டு காவிரியில் எதிர்பாராதவிதமாக பெருமளவில் தண்ணீர் பாயும் நிலையில், இந்த நீரைக் கடலில் கலக்கவிடக்கூடாது. தடுப்பணைகள், ஏரிகள், குளங்களில் சேமிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுகின்றன. ஆனால், ஆற்று நீர் கடலில் கலப்பது மிகவும் அவசியம் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
இந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதியன்று மேட்டூர் அணை பாசனத்திற்காகத் திறக்கப்பட்டது. வினாடிக்கு 20,000 கன அடிவீதம் முதலில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கர்நாடகாவில் கன மழை பெய்ய ஆரம்பித்ததால் ஜூலை 24ஆம் தேதியன்று அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு சுமார் 80,000 கன அடி வரை நீர் திறக்கப்பட்டது.
ஆனால், தொடர்ந்து அந்தப் பகுதியில் மழை பெய்துவருவதால் உச்சகட்டமாக 2.5 லட்சம் கன அடி அளவுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதையடுத்து, சமூக வலைதளங்களிலும் வாட்சப் குழுக்களிலும் தமிழகத்தில் போதுமான அணைகள் இல்லாத காரணத்தால் பெருமளவு நீர் கடலில் கலப்பதாக கருத்துகள் பரப்பப்பட்டன. இந்தக் கருத்துகள் தொலைக்காட்சிகளின் விவாத நேரங்களிலும் பெரிதாக விவாதிக்கப்பட்டன.
ஆனால், நீர் கடலில் கலக்கக்கூடாது என்பது முழுக்க முழுக்க தவறான கருத்து என்கிறார்கள் சூழலியல் வல்லுநர்கள். “ஆற்று நீர் நன்னீர். அது கடலில் சேர்வதன் மூலம்தான் கடலின் உப்புத்தன்மை சமநிலையில் இருக்கும்.
இல்லாவிட்டால் உப்புத் தன்மை பாதிக்கப்பட்டு, ஆவியாதலிலும் மாறுபாடு ஏற்படும். இது சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் கடல்தான் நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 70 சதவீதத்தை உருவாக்குகிறது. இது கடல்நீர் வாழ்விகள் உணவு தயாரிப்பதால்தான் கடலில் ஆக்ஸிஜன் உருவாக்கப்படுகிறது. கடல் நீர் வாழ்விகள் உணவு தயாரிக்க வேண்டுமென்றால், அவை சீரான வளர்ச்சியைப் பெற வேண்டியது அவசியம். ஆற்று நீர் கடலில் கலந்தால்தான் அவற்றில் உள்ள கனிமங்கள் கடலில் கலந்து சிறு நுண்ணுயிர்களுக்கு ஊட்டமாக அமையும். அவற்றை சிறு மீன்கள் உண்ணும். அவற்றை பெரிய மீன்கள் உண்ணும். இது ஒரு மிகப் பெரிய சங்கிலி. ஆற்று நீர் கடலில் கலப்பது கூடாது என்பதன் மூலமாக மிகப் பெரிய உயிர்ச் சுழற்சியை நிறுத்த முயல்கிறோம்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன்.
காவிரி நீர் பாசனத்திற்குப் பயன்படாமல் செல்கிறது என்று சொல்பவர்கள்கூட, கடலில் நீர் கலப்பது வீண் என்று சொல்வதை ஏற்கவில்லை.
அனைத்து விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த பி.ஆர். பாண்டியனும் கடலுக்குச் செல்ல வேண்டிய தண்ணீர் கடலுக்குச் சென்றுதான் சேர வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறார். ஆனால், நாம் ஒழுங்காகச் செயல்பட்டிருந்தால், இந்த அளவுக்குத் தண்ணீர் தேக்கவும் முடியாமல் பாசனத்திற்கும் பயன்படாமல் கடலுக்குச் செல்லாது என்கிறார் அவர்.
- மேட்டூர் அணையில் முழு உபரி நீரும் திறப்பு: கரை புரண்டு ஓடும் காவிரி
- நிரம்பி வழியும் மேட்டூர் அணை: பொங்கிப் பெருகும் காவிரி
- காவிரி: ”தண்ணீர் தரவில்லை என்றால் மின்சாரம் இல்லை”
“மேட்டூரிலிருந்து கழிமுகப் பகுதிவரை சமதளத்தில் காவிரி ஓடுகிறது. இங்கே இனி காவிரியின் குறுக்காக அணை கட்டுவது என்பது சாத்தியமில்லை. ஆனால், கடலுக்குச் சென்றதுபோக நாம் பயன்படுத்த வேண்டிய நீரைக்கூட சரியாக பயன்படுத்த முடிவதில்லை என்பதுதான் சோகம். கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பாசனக் கால்வாய்கள் முறையாகத் தூர்வாரப்படவில்லை. ஏரி, குளங்களைத் தூர்வாரவில்லை. இது முழுக்க முழுக்க பொதுப் பணித்துறையின் தவறு. அந்த வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இவ்வளவு நீர் கடலிலும் கலக்காது. பாசனத்திற்கும் பயன்பட்டிருக்கும்” என்கிறார் அவர்.
மேட்டூர் அணைக்கு மேலே ராசி மணல் என்ற இடத்தில் காமராஜர் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட அணையைக் கட்டினால் அங்கே 100 டி.எம்.சி. அளவுக்குத் தண்ணீரைத் தேக்க முடியும் என்கிறார் பி.ஆர். பாண்டியன்.
இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் கடலுக்குப் போக வேண்டிய நீரை நாம் விட்டே ஆக வேண்டும் என்கிறார்.
ஆனால், மேட்டூர் அணைக்குப் பிறகு காவிரி சமதளப் பகுதியில்தான் பாய்கிறது என்றாலும் மேட்டூர் அணையிலிருந்து கழிமுகப் பகுதிவரை 45 தடுப்பணைகளைக் கட்டும் வாய்ப்பிருக்கிறது. அவை கூடுதலாக நீரைத் தேக்கும் என்று குறிப்பிடுகிறார் அவர்.
மேலும் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளைத் தூர்வாருவது, ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுப்பது ஆகியவை நமது நீர்வளத்தைக் காப்பதற்கு மிக முக்கியம் என்கிறார் அவர். -BBC_Tamil