கேரள கனமழை வெள்ளத்தால் ரூ.19 ஆயிரத்து 512 கோடி இழப்பு, பலி எண்ணிக்கை 357ஆக உயர்வு..

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம், ரூ.19 ஆயிரத்து 512 கோடி இழப்பை சந்தித்துள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வழக்கம் போல் பெய்யும் தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு கோரத் தாண்டவம் ஆடியது.

கடந்த 9-ம் தேதி தொடங்கிய பருவமழை, தொடர்ந்ததால், நீர் வரத்து அதிகரித்தது. இதனால் 80 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டன. இதனால் கொச்சி, ஆலப்புழா, கோழிக்கோடு, மலப்புரம் என அனைத்து நகரங்களும் வெள்ள நீரில் மிதக்கின்றன.

கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோய் உள்ளன. இருக்க இடமின்றி, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பல்லாயிரக்கணக்கான மின்சாரக் கம்பங்கள் சாய்ந்து பல கிராமங்கள் மின்சார இணைப்பின்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் பிளவுபட்டுக்கிடக்கின்றன.

இதுகுறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாம் ஒரு பேரழிவின் நடுவில் இருக்கிறோம், அதைச் சமாளிக்க இணைந்து ஒன்றுபட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு போக்குவரத்து துண்டிப்பால் உணவு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நிவாரணப்பணிகளை மேற்கொள்ள ஆட்சியாளர்களுக்கும், மீட்பு பணி மேற்கொள்ள போலீசாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தினால் ரூ.19 ஆயிரத்து 512 கோடி அளவிற்கு கேரள மாநிலம் சேதத்தை சந்தித்துள்ளதாக குறிப்பிட்ட விஜயன், இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதில் இன்று மட்டும் 33 பேர் பலியானதாகவும்,எந்த மாநிலத்திலும் இல்லாத பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

-athirvu.in

TAGS: