கேரளாவின் ஒவ்வொரு குடிமகனையும் கண்ணீரில் ஆழ்த்திய மழை ஒரு வழியாக நின்றுவிட்டது. புதிதாக வாழ்க்கையை தொடங்கவேண்டும் என்பதுதான் வெள்ளத்தில் உயிரைக்காப்பாற்றிக் கொண்டவர்கள் தற்போது எதிர்கொள்ளவுள்ள புதிய சவால்.
இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள்; சுமார் அரைமில்லியன் மக்கள் நிவாரண முகாம்களில் இருக்கிறார்கள் என அரசே அறிவித்துள்ள நிலையில், கேரளாவில் நாம் பார்க்கும் ஒவ்வொரு பள்ளிக்கூடம், கல்லூரி, சமூதாயக்கூடங்களும் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வழிவதில் வியப்பில்லை.
”புதியவாழ்வு என்பது மீண்டும் வாழத்தொடங்குவது”
வெள்ளம் வடியாத தங்களது வீடுகளை தேடி மக்கள் செல்கிறார்கள். பலருக்கு செல்வதற்கு வீடே இல்லை என்பதும் நிதர்சனம். வடக்கு மற்றும் மத்திய கேரளாவில் எங்கெங்கு காணினும் வெள்ளத்தின் தாக்கம் தெரிகிறது.
மே மாதம் முதல் அக்டோபர் வரை மழைக்காலம் கொடுத்துவைத்த அனைத்து அற்புதத் தருணங்களையும் இந்த ஆகஸ்ட் வெள்ளம் தன்னுடன் எடுத்துச்சென்றுவிட்டது என்றே மக்கள் கருதுகிறார்கள்.
புதிதாக வாழ்க்கையை தொடங்குவது என்பது பலருக்கு புதிய வீட்டுக்குச் செல்வது, புதிய வேலையில் சேருவது, திருமண வாழ்வைத் தொடங்குவது, புதிய ஊருக்குச் செல்வது என பலவிதத்தில் அமையும். ஆனால் இந்த ஆண்டு புதிதாக தங்களது வாழ்க்கையை தொடங்கும் கேரளவாசிகள் ஒவ்வொருவரும் நம்பிக்கையற்று, கையறு நிலையில் புதிதாக அடி எடுத்து வைக்கிறார்கள்.
- ‘விளையாடுங்கள், வேட்டையாடாதீர்கள்’ – யானை குறித்து 11 சுவாரஸ்ய தகவல்கள்
- விந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு?
”எங்கள் கிராமத்தில் எல்லோரும் நிவாரண முகாமில் இருக்கிறோம். யாரிடத்திலும் எதுவும் இல்லை. சொந்தங்களை இழந்துள்ளோம். பழைய வாழ்க்கைக்குத் திரும்புவது என்பது என்ன? இந்த இழப்புகளை சுமந்துகொண்டே வாழ்வதுதான்,” என்கிறார் எழுபது வயது அப்புகுட்டன்.
ஆலப்புழா மாவட்டம் கருவட்டா கிராமத்தைச் சேர்ந்த அனைவரும், சுமார் 3,000 நபர்கள், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர்தான் அப்புகுட்டன். தனது அந்திமக் காலத்தில் தனக்கென இருந்த இரண்டு நண்பர்களை அவர் இழந்துள்ளார். ”முத்து, அம்மணி இரண்டு பேரும் என்னை தனியாக விட்டுப்போய்விட்டார்கள். எல்லோரும் அவை இரண்டும் நாய் தானே. மீண்டும் நாய்க்குட்டி வாங்கிக்கொள் என்கிறார்கள். என்னை பொருத்தவரை இரண்டு பேருமே என் மீது தீராத அன்பு கொண்ட உள்ளங்கள். இனி நான் எந்த நாய்க் குட்டியையும் வளர்க்கமுடியாது,” என்கிறார் அப்புக்குட்டன்.
பசியில் வாடும் பசுக்கள்
ஏழு பசுக்களுக்கு சொந்தக்காரர் ரத்தனம்மாள். எல்லா பசுக்களும் வெள்ளத்தில் மீண்டுவிட்டாலும், அவைகளுக்கு தீனி போட முடியாமல், குடிப்பதற்கு நன்னீர் அளிக்கமுடியாமல் தவிக்கிறார் இரத்தினம்மாள்.
”எனக்கு உணவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பசுக்களை எப்படி காப்பாற்றுவேன் என்று தெரியவில்லை. நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. வெள்ளத்தில் உயிர்பிழைத்த என் பசுக்கள் பசியிலும், நோயிலும் இறந்துவிடுமோ என்ற பயம் என்னை வாட்டுகிறது,” என்கிறார் இரத்தினம்மாள்.
அடுத்தடுத்த கிராமங்களில் நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணவுக்காக, தண்ணீருக்காக, ஆடைகள், காலணி என நிவாரணப்பொருட்களுக்காக வரிசையில் காத்திருப்பதை பார்க்கமுடிந்தது.
வெள்ளம் வடிந்த இடங்களில், வீடுகளுக்குள் பெரிய பாம்புகள் ஒளிந்துள்ளன. குழந்தைகளோடு பாழான வீட்டுக்குச் செல்வது பல குடும்பங்களுக்கு அச்ச உணர்வை தருகிறது. மின்சாரம் சில கிராமங்களில் அளிக்கப்பட்டாலும், வீட்டை பழுதுபார்க்க காசில்லாமல் நிவாரண முகாம்களில் சிலர் தங்கியிருக்கிறார்கள்.
”வீடு முழுவதும் பாசி படர்ந்து, சகதியாக உள்ளது. வீட்டுச்சாதனங்கள் எல்லாம் பழுதாகிவிட்டன. இந்த ஆண்டு ஓனம் திருவிழாவுக்கு காசு சேர்த்து வைத்திருந்தேன். எங்கள் வீட்டு பீரோ எங்கே அடித்துச்செல்லப்பட்டது என்று தெரியவில்லை,” என வருத்தத்தில் பேசினார் சந்திரா.
ஏதுமற்றவர்களின் நிலை
நீர் மற்றும் காற்று வழியாக நோய் பரவும் அபாயத்தைக் கட்டுப்படுத்த ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில் வெளிமாநிலங்களில் இருந்துவந்த தொழிலாளர்கள் அகதிகளாக உணர்கிறார்கள். ”எங்களுக்கு அடுத்து இரண்டு மாதங்களுக்கு வேலை அதிகம் கிடைக்காது. கடைகள் எல்லாம் மீண்டும் தொடங்கினால்தான் எங்களுக்கு சம்பளம் கிடைக்கும். சொந்த ஊருக்கு போய்விடலாமா என்றும் தோன்றுகிறது.
ஆனால், நான் கொண்டுவரும் பணத்தை நம்பி குடும்பத்தார் காத்திருப்பார்கள். நானே ஒரு சுமையாக போய் நின்றால் அதுபிரச்சனைதான்,” வெள்ளத்தில் உயிர்பிழைத்த நித்யானந்த் பரமன் சொல்கிறார். மேற்குவங்கத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வேலை தேடி கேரளா வந்தவர் இவர்.
- இலங்கை ராணுவத்தில் கீரிப்பிள்ளைகள்: வெடிகுண்டுகளை கண்டறிய உதவும்
- மாதவிடாய் மன அழுத்தம்: தெரிந்து கொள்ள வேண்டியவை
”எங்கள் ஊரில் பெரிய வெள்ளம் வந்திருக்கிறது. ஆனால் கேரளாவில் நான் கண்ட வெள்ளம் உயிரை குடிக்கும் வெள்ளமாக இருந்தது. நான் இறக்கவில்லை என்பது சாதனையாக உள்ளது. அரசு சாப்பாடு, தண்ணீர் கொடுக்கிறது. எங்களைப் போன்ற வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை அரசு கணக்கில் எடுத்துக்கொள்வார்கள் என்று நம்புகிறோம்,” என்கிறார் நித்யானந்த் பரமன்.
போக்குவரத்து சீராகி உள்ளதால் பல்வேறு மாநிலங்களில் இருந்துவரும் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றுசேருகின்றன. பேருந்துகள், உள்ளூர் ஆட்டோக்கள் செயல்படுகின்றன. சாலைகளில் இருந்த கழிவுகள், சேர்ந்துள்ள குப்பைகள் அகற்றப்பட்டுவருகின்றன. ரயில் நிலையங்கள் முழுவீச்சில் செயல்படத்தொடங்கியுள்ளன. பழைய கொச்சின் விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பணம் உள்ளவர்கள் கடைத்தெருக்களுக்குச் சென்று புதிதாக வீட்டு உபயோக பொருட்களை வாங்குகிறார்கள். ஏதுமற்றவர்கள் உதவும் கரங்களுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். -BBC_Tamil