திருவனந்தபுரம்: கேரளா மக்களுக்கு உதவுவதற்காக தமிழக மக்கள் லட்சக்கணக்கில் தினமும் போன் செய்வதாக பாலக்காடு பகுதியை சேர்ந்த கேரளா எம்பி ராஜேஷ் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.
கேரளாவில் மீட்பு அணிகள் துரிதமாக நடந்து வருகிறது. பல மாநிலங்களில் இருந்து அங்கு உதவிகள் குவிந்து வருகிறது. கேரளாவில் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளம் வடிய தொடங்கி உள்ளது.
கேரளாவில் பெரிய மழை பெய்துள்ளது. கேரளா வெள்ளத்திற்கு இதுவரை 370 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
உதவி
கேரளா வெள்ளத்திற்கு தமிழர்கள் பெரிய அளவில் உதவி செய்தனர். கேரளாவில் வெள்ளம் என்று தெரிந்தவுடன் உதவி செய்ய தமிழர்கள் வேகமாக களமிறங்கினார்கள். பல மாவட்டங்களில் இருந்து உதவி பொருட்களை கேரளாவிற்கு அனுப்பினார்கள். தொடர்ச்சியாக இப்போதும் அனுப்பி வருகிறார்கள்.
அதிகமான பேர் உதவி
அதோடு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளும் கேரளாவிற்கு உதவி செய்ய களமிறங்கினார். கேரளாவிற்கு சென்ற உதவி வாகனங்களில் அதிகமானது தமிழ்நாட்டில் இருந்து சென்றதுதான் என்று அவர்களே சந்தோசமாக பாராட்டி இருக்கிறார்கள். பொருள் உதவி மட்டுமில்லாமல், ஆள் உதவியும் செய்து இருக்கிறார்கள்.
போன் உதவி
இந்த நிலையில்தான் கேரளா எம்பி ராஜேஷ் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ”தினமும் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கில் போன் வந்து கொண்டே இருக்கிறது. வெள்ளம் என்று தெரிந்தவுடன் அதிக மக்கள் உதவி செய்ய களமிறங்கி வந்தனர். தொடர்ந்து எங்கள் பகுதிக்கு அவர்கள்தான் உணவுகளையும், நிவாரண பொருட்களையும் அனுப்பி வருகிறார்கள். தொடர்ந்து உதவி செய்து வருகிறார்கள்” என்றுள்ளார்.
தவறான கருத்து
மேலும் ”தமிழர்களுக்கு எதிராக இங்கே சிலர் விஷமத்தனமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியே தேவையில்லை. இங்கு உதவு செய்பவர்களை கூட அவர்கள் அப்படித்தான் கிண்டல் செய்கிறார்கள். தமிழர்கள் இப்போது செய்யும் உதவியை மறக்க மாட்டோம்” என்றுள்ளார்.