திருச்சி: திருச்சி முக்கொம்பு அணை உடைந்துள்ளது. இந்த அணைக்கு மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. இந்த அணை உடைந்தது அந்த பகுதி மக்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காவிரியில் அதிக அளவு தண்ணீர் வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலம் மொத்தமாக உடைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நலிவடைந்து பாலம் மொத்தமாக உடைந்தது.
கர்நாடகாவில் இருந்து காவிரியில் அதிக நீர் வருவதால் இந்த பாலம் உடைந்துள்ளது. தற்போது முக்கொம்பு அணையிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
வரலாறு கொண்டது
1800 களில் கல்லணையின் கட்டுமானத்தை பார்த்து வியந்த ஆங்கிலேயர்கள்தான், இதே போல் ஒரு அணையை அதற்கு அருகிலேயே கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அதன்படி 1800 தொடக்கத்தில் ஆரம்பித்து 1836ம் ஆண்டு, இந்த அணை கட்டப்பட்டது. சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் கட்டிய அணை ஆகும் இது. கல்லணையால் ஈர்க்கப்பட்டு அதன் தொழில்நுட்பத்தைப் பார்த்து அதேபோல் இதன் கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு என்ன
இது கல்லணையை போலவே எவ்வளவு பெரிய வெள்ளம் வந்தாலும் தாங்கும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. இதில் மொத்தம் 45 மதகுகள் உள்ளது. இதன் மேல்பகுதி பாலமாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலே 6.3 மீட்டர் அகலம் கொண்ட பாலம் உள்ளது. இதில் நேற்று மாலை வரை போக்குவரத்து இருந்தது. ஆற்றுக்கு இருபுறத்திலும் உள்ள மக்கள், இந்த பாலத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தேவை என்ன
மேட்டூர் , பவானி, அமராவதி அணைகளில் இருந்து வரும் நீரை, காவிரி கொள்ளிடம் என்று இரண்டாக பிரித்து அனுப்பும் அணைதான் முக்கொம்பு. கொள்ளிடம் ஆற்றில் நீர் சென்று கடலில் தேவையில்லாமல் கலப்பதை தவிர்க்க இந்த அணை கட்டப்பட்டது. இங்கிருந்துதான் பல்வேறு வாய்க்கால்களுக்கு தண்ணீர் பிரிந்து செல்கிறது. டெல்டா விவசாயிகளின் தேவையை 180 ஆண்டுகளாக இதுதான் பூர்த்தி செய்து வருகிறது.
பெரிய சுற்றுலாதளம்
அதுமட்டுமில்லாமல், இந்த அணையின் நுழைவாயிலில் பெரிய பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சிக்கு சுற்றிப்பார்க்க செல்லும் மக்கள் முக்கொம்பை சுற்றிப்பார்க்காமல் செல்ல மாட்டார்கள். அதேபோல் பல காதலர்கள் அதிகம் தென்படக்கூடிய இடமும் இதுதான். காலை, மாலைகளில் இந்த பாலம் பெரிய நடைமேடையாக பயன்பட்டு வந்தது.
எல்லாம் போனது
இந்த நிலையில்தான் கொள்ளிடம் முக்கொம்பு மேலணையில் 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. முக்கொம்பு மேலணையின் 9 மதகுகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் அங்கு உள்ள நீர் அப்படியே கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்லும் பரிதாபம் ஏற்பட்டுள்ளது. அதேபோல், மேலே போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.