சென்னையில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
அதன் காரணமாக 5,595 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 20 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். பல்துறை மண்டல குழுக்கள் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டன. வெள்ள பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதில் 43 வட்டங்களும், 186 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒரு பெண் உள்பட 3 பேர் இறந்துள்ளனர். 954 குடிசைகள் முழுவதுமாகவும், 1,029 குடிசைகள் பகுதியாகவும் சேதம் அடைந்துள்ளன. 7,167 ஏக்கர் நிலங்கள் சேதம் அடைந்துள்ளன. நிவாரண தேவையின் அடிப்படையில் முகாம்கள் அமைக்கப்படும்.
தமிழகத்தில் இருந்து இதுவரை கேரளத்துக்கு ரூ.22.56 கோடி மதிப்பிலான நிவாரண நிதி மற்றும் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 353 லாரிகளில் நிவாரண பொருட்கள் கொண்டுசெல்லப்பட்டன.
வானிலை ஆய்வு மையம் தரும் முன்னெச்சரிக்கை தகவல்களை மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பிவைக்கிறோம். இந்த பணிகளுக்கான அணுகுமுறை தொடர்பான கொள்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது. எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கான வரிவான ஆய்வு அறிக்கையும், வரைபடமும் ஏற்கனவே உள்ளன.
தாழ்வாக உள்ள பகுதிகள், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு எந்த காரணத்தை முன்னிட்டும் செல்லக்கூடாது. தடையை மீறிச்சென்றவர்கள் மீது சில இடங்களில் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
-dailythanthi.com