திருச்சி, முல்லைப்பெரியாறு அணையை திறந்ததால்தான் கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக அந்த மாநில அரசு கூறிய குற்றச்சாட்டை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்து உள்ளார்.
திருச்சியை அடுத்த முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள மேலணை வெள்ளப்பெருக்கில் உடைந்தது. அங்கு சென்று நேற்று அந்த அணையை பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- கேரளாவினுடைய வெள்ளத்திற்கு காரணம், முல்லைப்பெரியாறு அணையை திறந்ததுதான் என்று கேரள அரசு குற்றம் சாட்டி உள்ளதே? பதில்:- ஒரு இடத்தில் தான் நம்முடைய தண்ணீர் செல்கின்றது. அனைத்து இடங்களுக்கும் எங்கிருந்து தண்ணீர் வந்தது? கேரளாவில் ஒரு இடத்தில் பாதிக்கவில்லை, இருக்கின்ற 80 அணைகளில் இருந்து உபரிநீர் வந்த காரணத்தினால் தான் பல இடங்களிலும் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அரசு 152 அடிக்கு உயர்த்தக் கூடாது என்பதற்காக, வேண்டுமென்றே ஒரு தவறான கருத்தைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஏற்கனவே, வெள்ளநீர் வருவதற்கு முன்பாகவே, ஒரு மாதத்திற்கு முன்பு, நிபுணர் குழு அங்கே வந்து ஆய்வு செய்து, அணை முழுமையாக பாதுகாப்பாக இருக்கின்றது என்று தெரிவித்து இருந்தார்கள்.
142 அடி தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்று அவர்கள் தெரிவித்து இருக்கின்றார்கள். பொதுப்பணித்துறை செயலாளர் கூட இதில் கலந்துகொண்டார். அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிபுணர்கள் மத்திய அரசில் இருந்து அனுப்பப்பட்டு, பார்வையிட்டு, ஆய்வு செய்து, ஆய்வின் அடிப்படையில் 142 அடி முழுமையாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம், அந்த அளவிற்கு அணை பாதுகாப்பாக இருக்கிறது என்று அவர்களே தெரிவித்தார்கள்.
அதற்கு, 20 நாட்களுக்கு பிறகுதான் மழையே வந்தது. மேலும், மழை வந்தது இந்தப் பகுதியில் மட்டுமல்ல, கேரளாவிலே பல்வேறு பகுதிகளில் மழை வந்தது, பல்வேறு பகுதிகளில் நீர் சூழ்ந்தது.
இந்த ஒரு பகுதி மட்டுமாக இருந்தால் சொல்லலாம், மற்ற பகுதிகளுக்கு எப்படி நீர் வந்தது? அந்தந்த பகுதியில் இருக்கின்ற அணையில் அதிக நீர் இருந்த காரணத்தினாலே சேமிக்க முடியாத நீரெல்லாம் உபரிநீராக வெளியேறிய காரணத்தினாலே அங்கே வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டு இருக்கின்றதேயொழிய, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரினால் அல்ல. மேலும், வெள்ளம் புகுந்து, பாதித்து, ஒரு வாரம் கழித்துத்தான் அங்கே தண்ணீரே திறக் கப்படுகிறது, உடனடியாக திறக்கப்படவில்லை. மேலும், மூன்று முறை எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது, 139 அடி வருகின்ற பொழுதே எச்சரிக்கை விடப்படுகிறது, அதற்கு பிறகு 141 அடி வரும் பொழுது எச்சரிக்கை விடப்படுகிறது, பின்னர் 142 அடி வரும்பொழுது எச்சரிக்கை விடப்படுகிறது.
கிட்டத்தட்ட 11,000, 12,000 கனஅடி தண்ணீர், சிறிது சிறிதாகத்தான் திறக்கப்படுகிறதேயொழிய, ஒரேயடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆகவே, வெள்ளநீர் வருவதற்கு முன்பாகவே, கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாக அங்கே இருக்கின்ற அணை கள் முழுவதும் நிரம்பி, உபரி நீராக வெளியேறி, அந்த உபரி நீரினால் தான் கேரளாவிலே வெள்ளம் பாதித்தது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேள்வி:- தமிழ்நாட்டில் அணைகள் எல்லாம் பாதுகாப்பாக இல்லையென்று சொல்கிறார்களே? அடுத்து கட்டமாக என்ன செய்யப்போகின்றீர்கள்?
பதில்:- அணைகள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றது, பாதுகாப்பாக இல்லை என்பது தவறான கருத்து. வலுவிழந்த பாலம், கைவிடப்பட்ட பாலம் என்று சொல்லும்பொழுது அதை எப்படி சீர் செய்யமுடியும்? வலுவிழந்த பாலம் என்பதால்தான் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. அதில், அத்துமீறிப்போனால் என்ன செய்ய முடியும்? வலுவிழந்த பாலத்திற்கு பதிலாகத்தான் அங்கு புதிய பாலம் கட்டப்பட்டு, திறக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
-dailythanthi.com