நெடுவாசலில்.. விளை நிலத்தையும், விவசாயிகளையும், நிலடித்தடி நீரையும்.. ஹைட்ரோ கார்ப்பன் என்றும் இயற்கை எரிவாயு திட்டத்திடமிருந்து காப்பாற்ற 197 நாட்கள் விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் திரண்டு வந்து போராடினார்கள். இந்தப் போராட்டம் தமிழகம் மட்டுமின்றி கடல் கடந்த தேசத்திலும் எதிரொலித்தது. இந்த நெடுவாசல் போராட்டம் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மக்கள் போராட்டத்தின் விளைவு நெடுவாசல் திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்தம் எடுத்த கர்நாடக ஜெம் நிறுவனம் எனக்கு நெடுவாசல் வேண்டாம் என்று சொல்ல வைத்தது. இன்று வரை யாரும் நெடுவாசலுக்குள் நுழையமுடியவில்லை.
இந்த நிலையில் தான் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மேட்டூருக்கு தண்ணீர் வரத்து அதிகரித்திருந்த நிலையில் கல்லணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு கல்லணையும் திறக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்த சில நாட்களில் தஞ்சை கல்விராயன்பேட்டை கிராமத்தில் கரை உடைந்து தண்ணீர் வீணாக போனது. அதன் பிறகு கொள்ளிடத்தில் தண்ணீரை திறந்து கடலுக்கு விட்டார்கள். கல்லனை கால்வாய்க்கு தண்ணீர் அனுப்புவது குறைந்தது. இவ்வளவு தண்ணீர் இருந்தும் கடைமடைக்கு தண்ணீர் செல்லவில்லை. அதனால் டெல்டா மாவட்டங்களில் தினசரி போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கல்லணை பாசனம் உள்ள கடைமடை பகுதிகளுக்கு சில நாட்கள் வரும் தண்ணீரை நம்பி விதைத்த நெல்லும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கொடு என்று விவசாயிகள் வைத்த கோரிக்கை அதிகாரிகளுக்கு எட்டவில்லை. ஆலங்குடி தி.மு.க ச.ம.உ வல்லவாரியில் விவசாயிகளை திரட்டி போராட்டக் களம் அமைத்த நிலையில் அங்கு வந்த அதிகாரிகள் தண்ணீர் வரும் என்று எழுதிக் கொடுத்தார்கள். அதனால் போராட்டம் கைவிடப்பட்டது. அடுத்த சில நாட்களில் நாகுடிக்கு சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் விவசாயிகளிடம் நாகுடிக்கு தினசரி 300 கனஅடி தண்ணீர் வரும் என்று உறுதியளித்தார். ஆனால் 100 கனஅடி கூட தண்ணீர் கிடைக்கவில்லை. அப்பகுதியில் உள்ள 160 பாசன ஏரி, குளங்களுக்கு தண்ணீர் எட்டிக்கூட பார்க்கவில்லை.
அதனால் அமைச்சர் சொன்னபடி தினசரி 300 கன அடி தண்ணீர் வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு நல்ல தீர்வு கிடைக்கவில்லை. கடந்த மாதம் மராமத்து பார்த்த்தாக பணம் எடுக்கப்பட்டுள்ள கல்லணை கால்வாய் கரை பலமாக இல்லை என்று அதிகாரிகள் கூறிவந்தனர். அதனால் தான் நாகுடி பகுதி கடைமடைப் பாசன விவசாயிகள் 22 ந் தேதி காலை முதல் நாகுடி கல்லணை கால்வாய் அலுவலகத்தின் முன்னால் திரண்ட விவசாயிகள் கடைமடைக்கு தண்ணீர் வரும் வரை காத்திருக்கிறோம் என்று போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் வெள்ளிக் கிழமையுடன் 3 வது நாளையும் கடந்தது.
முதல் நாளில் சுமார் 200 விவசாயிகளுடன் தொடங்கிய போராட்டம் நெடுவாசல் போராட்டம் போல நாளுக்கு நாள் அதிகரித்து 3 வது நாளில் சுமார் 1000 விவசாயிகள் பங்கேற்ற பிரமாண்ட காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. போராட்டப் பந்தலுக்கு வருவோர்க்கு எல்லாம் தண்ணீர், மோர் வழங்கப்பட்டதுடன் மதிய உணவும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இப்டித்தான் நெடுவாசலில் ஆர்வத்தோடு போராட்டக் களத்திற்கு வந்தவர்களுக்கு மதிய உணவு கொடுத்து ஆட்டம் பாட்டத்துடன் திருவிழா போல போராட்டம் நடந்தது. நாட்கள் ஆக ஆக நாகுடியிலும் அப்படித் தான் நடக்கும் என்றவர்கள் நாளை கல்லூரி மாணவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாகுடி போராட்டக் களத்திற்கு வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகள், வர்த்தக சங்கங்கள், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் வர்த்தக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்.
போராட்டத்தின் முதல் நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு ஆறுகள் தூர்வாராமலேயே பணத்தை எடுத்துவிட்டார்கள். இவ்வளவு தண்ணீர் இருந்தும் விவசாயிகளுக்கு பயனில்லாமல் கடலில் கலந்துவிட்டது. தமிழக அரசு சரியான நடவடிக்கை எடுக்காததால் தான் இந்த அவல நிலை என்றார்.
முதல் நாள் போராட்டத்தில் இருந்து தினசரி போராட்டம் நடக்கும் ஆற்றங்கரை ஆலமரத்தடிக்கு அறந்தாங்கி தொகுதி அ.ம.முக. எம்.எல்.ஏ ரெத்தினசபாபதி விவசாயிகளுடன் இருந்து அங்கேயே மதிய உணவையும் சாப்பிட்டு தண்ணீர் கிடைக்கும் வரை காத்திருப்போம் என்று கூறியதுடன்..
அமைச்சர் சொன்னார் அதிகாரிகள் கேட்கவில்லை. இனியும் அதிகாரிகளை நம்பி பயனில்லை. எனக்கு ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்காக நானும் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இந்த போராட்டம் இப்படியே போகாது இன்னம் வலுவடையும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் போல நடக்கும். அதற்குள் இந்த அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைநிலை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். நாங்கள் போகவில்லை. நிச்சயம் கடைமடையில் நாகுடிக்கு தினசரி 300 கனஅடி தண்ணீர் கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது என்றார்.
ஆதரவு கரம் நீட்டி வந்த மாஜி தி.மு.க எம்.எல்.ஏ உதயம் சண்முகம்.. நான் எம்.எல்.ஏ வாக இருந்த போதும் இப்படி தண்ணீர் இல்லாமல் போராட்டம் நடத்தினோம். இப்போது விவசாயிகள் கையிலெடுத்திருக்கும் இந்த போராட்டம் வெற்றி பெற வேண்டும். நாகுடியில் மட்டும் போராடாமல் சென்னை சென்று போராட்டம் நடத்தவும் அதற்காக ஆட்களை கொண்டு போகவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.
நாகுடி பகுதி விவசாயிகள் கூறும் போது.. தினசரி 300 கனஅடி தண்ணீர் வந்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். ஆனால் அமைச்சர் சொன்ன பிறகும் தண்ணீர் கொடுக்காத நிர்வாகம் முறை வைத்து தண்ணீர் திறக்கிறது. இதனால் விவசாயிகள் கடனை வாங்கி விதை விதைத்து நாற்றங்காலிலேயே கருகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் எங்கள் போராட்டத்திற்கு மாணவர்களும், இளைஞர்களும் அதிகமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். நாளை கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்த வருகிறார்கள். விரைவில் நெடுவாசல் போல போராட்ட வடிவங்கள் மாறலாம். நீடிக்கலாம் என்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மீண்டும் ஒரு போராட்டக் களமா என்று அதிகாரிகள் வழிபிதிங்கி நிற்கிறார்கள்.
நாகுடி கடைமடை விவசாயிகள் போராட்டம்- பணிந்த அதிகாரிகள்
புதுக்கோட்டை மாவட்ட கடைமடை பாசன விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று நாகுடி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கல்லணை கால்வாய் கரையில் 4 நாட்களாக காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டத்தின் ஒவ்வொரு நாளும் விவசாயிகளுடன் அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இன்று(25.8.2018) 4 வது நாள் போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டக் களத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் சு.இருநாவுக்கரசர், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல கட்சி பொறுப்பாளர்களும் ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.
நாகுடி பகுதிக்கு தினசரி 300 கன அடி தண்ணீர் வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். அதன் பிறகு பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாலையில் சென்று இரவு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நாளை முதல் 250 கன அடி வீதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கொடுத்ததால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாகுடி பகுதிக்கு 250 கன அடி தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதால் பல பாசன வாய்க்காலில் தண்ணீர் செல்வதை நிறுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் போராட்டம் அதிகாரிகளை பணிய வைத்துள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
-nakkheeran.in