ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கோரியும், இந்த வழிமுறையை வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 35 ஏ-க்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கின் விசாரணை 31-ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு உள்ள சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், எனவே மக்கள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபடுமாறும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக வதந்தி பரவியது.
இதைத்தொடர்ந்து அனந்த்நாக் மற்றும் புல்வாமா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும், ஸ்ரீநகரிலும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்கள் வீடு திரும்பினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் பல இடங்களில் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், இந்த வழக்கு 31-ந் தேதிதான் விசாரணைக்கு வருகிறது எனவும், யாரும் வதந்தியை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டனர். சில இடங்களில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது.
-dailythanthi.com