திருவனந்தபுரம், கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில், பல நூற்றாண்டுகள் பழமையான பத்மநாபசாமி கோவில் உள்ளது. 18–ம் நூற்றாண்டின்போது, கேரளாவையும், தமிழ்நாட்டின் சில பகுதிகளையும் ஆண்ட திருவாங்கூர் சமஸ்தானம், அந்த கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து கட்டியது. 1947–ம் ஆண்டு, திருவாங்கூர் சமஸ்தானம், இந்தியாவுடன் இணைந்தது. அதன்பிறகும், அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்த அறக்கட்டளையால் கோவில் நிர்வகிக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவிலில் முறைகேடுகள் நடப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே பழமையான அக்கோவிலில், ரகசிய பாதாள அறைகள் இருப்பதாகவும், அங்கு பொக்கிஷங்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும் பேச்சு எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், கோவிலில் 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டன. அங்கு தங்கம், வெள்ளி ஆபரணங்கள் என ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இப்போது கேரளா கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ள பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது.
கேரளாவின் கட்டமைப்பு உருகுலைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் நகைகள், விலைமதிக்க முடியாத பொக்கிஷயங்களை பயன்படுத்தலாம் என பேச்சும் எழுந்தது.
மக்கள் ஒரு தரப்பினர் மத்தியில் இந்த பேச்சு எழுந்தாலும் மன்னர் தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் மன்னர் ஆதித்ய வர்மாவிடம் கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷங்களை நிவாரணத்துக்கு பயன்படுத்த அனுமதிக்கலாமே என கேள்விகள் எழுப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய ஆதித்ய வர்மா, நகைகளை வெள்ள நிவாரணத்திற்கு பயன்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கோவிலில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புள்ள பொக்கிஷங்கள் உள்ளது என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
”பத்மநாபசாமி கோவிலில் எத்தனை கோடிக்கு பொக்கிஷங்கள் உள்ளது என்பது எனக்கு தெரியாது. அதனுடைய மதிப்பு குறித்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. என்னுடைய முன்னோர்கள், என்னிடம் கூறிய வகையில் நெல்லுக்கு இடையே ஆயிரம் கிலோவுக்கும் அதிகமாக தங்க நகைகள் இருக்கின்றன என்று கூறியுள்ளனர். அவசர காலத்துக்கு தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ள வைக்கப்பட்டு உள்ளது. மாநிலத்தில் இப்போது மிகவும் மோசமான இயற்கைப் பேரிடர் ஏற்பட்டுள்ளது. இப்போது, கோவிலில் உள்ள பொக்கிஷங்களை நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டுதான் முடிவு செய்ய வேண்டும்,” என்று கூறியுள்ளார் ஆதித்ய வர்மா.
பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை பயன்படுத்துவது தொடர்பாக கேரள மாநில அரசும் கருத்து கூற வேண்டும். அப்போதுதான் நாங்களும் எங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம். பத்மநாபசாமி கோவில் பொக்கிஷங்களை நிவாரணத்துக்கு பயன்படுத்தும் சூழல்நிலை ஏற்பட்டால், மற்ற மதவழிபாட்டு தலங்களான தேவாலயம், மசூதிகளிடம் இருந்தும் பெற வேண்டும். பத்மநாபசாமி கோவிலோடு இந்தக் கடமை முடிந்துவிடக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
-dailythanthi.com