டெல்லி: இடதுசாரி செயற்பாட்டாளர்கள் கைது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பீமா கோரேகானில் தலித்துகள் மற்றும் உயர் ஜாதியினருக்கு நடுவேயான மோதல் சம்பவத்தின்போது தலித்துகளுக்கு ஆதரவாக இருந்த இடதுசாரி சிந்தனையாளர்கள் மீது நேற்று மகாராஷ்டிரா போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (உபா) பாய்ந்தது.
தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கர் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் நேற்று போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.
இதில், இடதுசாரி சிந்தனையாளரும், எழுத்தாளருமான, வரவர ராவ், மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ், செயற்பாட்டாளர்கள் அருண் பெரெய்ரா, கவுதம் நவ்லகா மற்றும் வெரூன் கோன்சல்வஸ் ஆகியோர், இந்த சோதனைகளின்போது போலீசாரால் உபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கையில் காவல்துறை அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வெளியான மீடியா செய்திகள் அடிப்படையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தானாக முன்வந்து (suo motu) வழக்குப் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கூறி மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேசிய மனித உரிமைகள் ஆணையம். மகாராஷ்டிரா தலைமைச் செயலாளர் மற்றும் போலீஸ் டிஜிபிக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 4 வாரங்களுக்குள், அரசு தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.