செவ்வாய்க்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து அறிஞர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களுமான 5 பேரை காவல்துறை கைது செய்தது.
மாவோயிச சிந்தனையாளர் வரவர ராவ், வழங்கறிஞர் சுதா பரத்வாஜ், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருண் ஃபெரைரா, கௌதம் நவ்லாகா, மற்றும் வெர்னன் கொன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மனித உரிமைகள் மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாக அரசை விமர்சனம் செய்தவர்கள்.
சுதா பரத்வாஜ் வழக்கறிஞரும், செயற்பாட்டாளருமாவார். கௌதம் நவ்லாகா மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்து வருகிறார். அருண் ஃபெரைரா வழக்கறிஞரும், வெர்னன் கொன்சால்வஸ் எழுத்தாளரும், செயற்பாட்டாளருமாக உள்ளனர்.
புனே காவல்துறை இந்த கைதுகள் தொடர்பாக அதிக கவனம் எடுத்துள்ளது. ஆனால் மிக குறைவாக தகவல்களே இது தொடர்பாக உள்ளன.
கைது செய்யப்பட்டுள்ளோர் பற்றி பிபிசியிடம் பேசியபோது புனே காவல்துறை இணை ஆணையர் சிவாஜி போத்கே, “மாவோயிஸ்ட் வன்முறையின் மூளையாக இவர்கள் செயல்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருக்கிறார்.
“அறிவார்ந்த ரீதியில் இவர்கள் வன்முறையை வளர்க்கிறார்கள்…அவர்களை காவல்துறையில் காவலில் எடுப்பது அடுத்த நடவடிக்கையாகும்… இவர்களுக்கு எதிரான சாட்சியங்களை நாங்கள் நீதிமன்றத்தில் சமர்பிப்போம்… அவர்கள் எல்லாரும் புனேக்கு கொண்டுவரப்படுவர்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் மத்திய அரசு, அதனுடைய கொள்கைகளை விமர்சிப்பதை சகித்துகொள்ள போவதில்லை என்ற கருத்தை இந்த கைதுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கைதுகளை நியாயப்படுத்தியுள்ள பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராக்கேஷ் சின்கா, ஜிகாத்தை வளர்த்து வரும் இவர்கள், அமெரிக்காவில் கல்வி பயின்றவர்கள் என்று கூறியுள்ளார்.
செய்வாய்க்கிழமை புனே காவல்துறை நடத்திய கைதுகள் தலித்துகளுக்கும், மேல் சாதி மராத்தியருக்கும் இடையில் ஜனவரி மாதம் நிகழ்ந்த பீமா கோரகான் வன்முறையோடு தொடர்புடையவை என்ற நம்பப்படுகிறது.
சிவாஜி போத்கேயின் கூற்றுப்படி, ஜனவரி மாதம் தொடங்கி இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஜூன் மாதம் ஊடகப்பிரிவில் கண்டெடுக்கப்பட்ட கடிதம் ஒன்றில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதுபோல தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் படுகொலை குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த கடிதம் எப்படி வந்தது பற்றியும், அதனுடைய நம்பகத்தன்மை பற்றியும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த கடிதம் தொடர்பாக கருத்து தெரிவிக்க சிவாஜி போத்கே மறுத்துவிட்டார்.
ஜூன் 8ம் தேதி என்டிடிவி வெளியிட்ட செய்தியில், இந்த கடிதம் மாவோயிஸ்ட் என்று கூறப்படும் ரோனா வில்சனின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டதாக புனே காவல்துறை தெரிவித்ததாக பிடிஐ செய்தி முகமை கூறியது.
தற்போதைய கைதுகள் தொடர்பாக காவல்துறை சேகரித்துள்ள தகவல்கள் தெளிவாக தெரியவில்லை.
சமீபத்திய இந்த கைதுகளை அரச பயங்கரவாதம் மற்றும் கடுமையான அவசரநிலை என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. பி. சாவந்த் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசியிடம் கருத்து தெரிவித்த அவர், “எதிர் கருத்து மற்றும் விமர்சகர்களின் குரல்களை எவ்வாறு ஒடுக்க முயலலாம்? அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பது அனைவரின் உரிமை. சாதாரண மக்களின் தேவைகளை இந்த அரசு பூர்த்தி செய்யவில்லை என்று நான் உணர்ந்தால், இந்த அரசை விமர்சிக்க எனக்கு உரிமை உள்ளது. நான் நக்சலாக மாறினால் மட்டுமேதான் நானொரு நக்சல்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
“ஏழைகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் எழுதுவது ஒருவரை நக்சல் ஆக்கிவிடுவதில்லை. ஏழைகளுக்கு ஆதரவாக எழுதியதால் நடைபெறும் கைதுகள் அரசியலமைப்பையும், அரசியலமைப்பு உரிமைகளையும் மீறுவதாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டுமென கேட்டுக்கொண்ட எழுத்தாளரும், வரலாற்றாசிரியருமான ராமச்சந்திர குஹா, அடக்குமுறை மற்றும் கொடுமைகளுக்கு எதிரான குரல்களை ஒடுக்குவதை உச்ச நீதிமன்றத்தின் தலையீடு மூலம்தான் தடுத்து நிறுத்தமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
செய்தி சேனலான என்டிடிவியிடம் பேசிய ராமச்சந்திர குஹா, ”காங்கிரஸ் கட்சியும், பாஜக போல இந்த விஷயத்தில் குற்றம் செய்தது. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது தொழிலாளர்கள் துன்புறுத்தப்பட்டனர். தற்போதைய அரசும் அதே நடைமுறையை பின்பற்றுகிறது” என்று குறிப்பிட்டார்.
”கைது செய்யபட்டவர்கள் பலரும் ஏழை மக்களுக்கு உதவி செய்பவர்கள். மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இவர்களுக்கு எந்த பிரதிநிதித்துவமும் இருக்கக்கூடாது என்று இந்த அரசு நினைக்கிறது. பத்திரிகையாளர்களையும் அவர்கள் துன்புறுத்தி பஸ்தரில் இருந்து ஓடச்செய்கின்றனர்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல்வாதிகளுக்கும், பெருநிறுவன உலக முதலாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டிய ராமச்சந்திர குஹா, ”நக்சல் அமைப்பினரை நான் வெறுக்கிறேன். அவர்கள் ஜனநாயகத்துக்கு ஆபத்து விளைப்பவர்கள். நக்சல் மற்றும் பஜ்ரங் தள் ஆகிய இரு அமைப்பினரும் ஒரே மாதிரியானவையே. ஆனால், தலித் மக்களை, பழங்குடியினரை, நிலம் இல்லாத ஏழை மக்களை காப்பாற்றும் இந்த செயற்பாட்டாளர்கள் துன்புறுத்தப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.
‘ஜர்னலிசம் அன்ட் மாவோயிசம்’ பற்றி புத்தகம் எழுதியுள்ள ராகுல் பன்டிதா, “இது பைத்தியகாரத்தனமானது. சுதா பரத்வாஜ்-க்கும் மவோஸ்ட்டுகளுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர் ஒரு செயற்பாட்டாளர். அவருடைய பணிகள் பற்றி எனக்கு தெரியும். அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்” என்று ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
”மாவோஸ்ட்டுகளை கைது செய்ய வேண்டுமானால் செய்யுங்கள். உங்களோடு ஒப்புக்கொள்ளாதோரை கைதுசெய்ய வேண்டாம். சுதா பரத்வாஜ் போன்ற ஒருவர் பிரதமர் மோதியின் படுகொலையில் ஈடுபடுவதாக நம்புவது முட்டாள்தனமானது” என்று இன்னொரு ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளார்.
உளவுத்துறை நிறுவனங்கள் தங்களின் பணிகளை செய்து வருகின்றன என்று பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும், ஆர்எஸ்எஸ் சிந்தனையாளருமான ராக்கேஷ் சின்கா நாடாளுமன்ற மேலவையில் தெரிவித்திருக்கிறார்.
தொடர்புடைய செய்திகள்
- கைது செய்யப்பட்ட 5 செயற்பாட்டாளர்களின் பின்னணி என்ன?
- செயற்பாட்டாளர்கள் அதிரடி கைதும் பின்னணியும்
- இந்திய செயற்பாட்டாளர்கள் 5 பேர் திடீர் கைது
இந்த அறிஞர்களுக்கு உதவும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் வாதிடுவர். அரசு நிறுவனங்களிடம் இருந்து சான்றுகளை கோருவர். இந்த நிறுவனங்களிடம் சான்றுகள் இல்லாவிட்டால், நீதிமன்றம் அவர்களை விடுவிக்கும். புலனாய்வு நிறுவனங்கள் பிரகியா தாகூருக்கு எதிராக திரட்டிய சான்றுகள் தவறு என நிரூபிக்கப்பட்டதால் அவர் இப்போது சிறையை விட்டு வெளிவந்துள்ளார் என்று ராக்கேஷ் சின்கா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த கைதுகள் ஜனநாயகம் மீதான தாக்குதல் என்று குறிப்பிட்டுள்ள அரசியில் ஆய்வாளர் ஸோயா ஹாசன், “இந்தியாவில் ஒரு திட்டமிட்ட முறை உள்ளது. சமூக, அரசியல் செயற்பாட்டாளர்களும், சுதந்திரம் மற்றம் அநீதிக்கு எதிராக குரலெழுப்புவோரும் கைது செய்யப்படுகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
செவ்வாய்க்கிழமையன்று 5 முக்கிய செயற்பாட்டாளர்கள் நாடு முழுவதிலும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக மனித உரிமைகள் மீறல் குறித்து விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, வரவர ராவ், அருண் பெரேரா, வெர்னோன் கோன்சல்வேஸ் ஆகிய ஐந்து பேரும் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டபோது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என ஊடக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய செயற்பாட்டாளர்கள் 5 பேர் திடீர் கைது
- கைது செய்யப்படும் செயற்பாட்டாளர்கள்:“பெரும் கட்சிகளின் மெளனம்தான் அச்சம் தருகிறது”
இது தொடர்பாக மஹாராஷ்டிரா மாநில உள்துறை செயலாளர் மற்றும் மாநில போலீஸ் துறை இயக்குநர் ஜெனரலுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மனித உரிமை ஆணையம்,இது தொடர்பாக உண்மையை கண்டறிந்து நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.
இந்த செயற்பாட்டாளர்கள் மற்றும் அறிஞர்களை கைது செய்திருப்பது வெறுமனே கொடுமைப்படுத்துவதாகும். இத்தகைய வழக்குகளில் பல பிணை கிடைப்பதற்கு பல மாதங்கள் ஆகும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நடைபெற்றுள்ள இந்த கைதுகள் சகிப்புத்தன்மை குறைவானதாகவும், பெண்கள், தலித் மற்றும் சிறுபான்மையினர் மீதான கொடுமையாகவும் இந்தியாவின் பல தளங்களிலும் பார்க்கப்படுகிறது. -BBC_Tamil