திருவண்ணாமலையில் கிணற்றை தூர்வாரும்போது 12ம் நூற்றாண்டு பூமா தேவி சிலை கண்டுபிடிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே உள்ள வாணியந்தாங்கலில் சமுதாய கிணற்றை பொதுமக்கள் தூர்வாரும்போது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பூமாதேவி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், வாணியந்தாங்கல் கிராமத்தில் உள்ள சுமார் 60 அடி ஆழம் உள்ள சமுதாயக் கிணற்றை குடிநீர் தேவைக்காக பொதுமக்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஒன்றரை அடி உயரம் கொண்ட அம்மன் சிலை ஒன்று கிடைத்துள்ளது. அந்த சிலை வலது கை, வலது கால் உடைந்த நிலையில் காணப்பட்டது.

சமுதாயக் கிணற்றை தூர்வாரும்போது சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை வட்டாட்சியர் மனோகரன், மண்டல துணை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் ஆகியோர் சென்று சிலையைக் கைப்பற்றினர்.

சிலையைக் கைப்பற்றி அதிகாரிகள், திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர்.

இந்த சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது பூமாதேவி சிலை. இது 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சிலையின் வலது கை, வலது கால் உடைந்த நிலையில் இருப்பதால் மக்கள் வழிபாடு செய்ய பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தனர்.

tamil.oneindia.com

TAGS: