கடப்பா: ஆந்திர மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஏர்பேடு என்ற வனப்பகுதியில் செம்மரங்களை கடத்துவதாக தகவல் கிடைத்தது. இதன் பேரில் கடப்பா மாவட்ட செம்மரம் கடத்தல் தடுப்பு போலீஸார் வனப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது அவர்களை சரணடையுமாறு கோரியும் அவர்கள் சரணடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் போலீஸார் வானத்தை நோக்கி சுட்ட போது கடத்தல்காரர்கள் கற்களை போலீஸார் மீது எறிந்தனர்.
இதனால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது போலீஸார் துப்பாக்கியால் சுட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் என்பவர் கொல்லப்பட்டார். இவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் ஆந்திரத்தில் உள்ள சேஷாசல வனப்பகுதியில் செம்மரம் வெட்டியதாக 22 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதுபோல் தமிழககத்தில் இருந்து கூலி வேலைக்காக தமிழர்கள் ஆந்திரத்துக்கு செல்வதும் அங்கு அவர்கள் செம்மரக்கடத்தலில் ஈடுபடுத்தப்படுவதும் முக்கிய குற்றவாளிகளை விட்டு விட்டு தொழிலாளர்களை ஆந்திர போலீஸ் சுட்டுக் கொல்வதும் வாடிக்கையாகிவிட்டது.