கேரளாவை ஆட்டிப்படைக்கும் எலி காய்ச்சல்.. 2 நாளில் 23 பேர் பலி.. வெள்ளத்திற்கு பின்பும் சோகம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் பரவி வரும் எலி காய்ச்சல் காரணமாக இதுவரை, 23 பேர் பலியாகி உள்ளனர்.

சில நாட்களுக்கு முன் கேரளாவில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. அங்கு வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கேரளாவை மேலும் சோதிக்கும் வகையில் அங்கு எலி காய்ச்சல் எனப்படும் லெப்டோஸ்பிரோசிஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியாமல் அங்கு அதிகாரிகள் திணறி வருகிறார்கள்.

வெள்ளத்தால் பலி

அங்கு வெள்ளத்தால் 483 பேர் பலியாகி உள்ளனர். அதேபோல் 2500க்கும் அதிகமானோர் மோசமாக காயம் அடைந்துள்ளார். 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து இருக்கிறார்கள். 2.5 லட்சம் பேர் உடல் நலம் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

எலி காய்ச்சல் பரவுகிறது

தற்போது அங்கு எலி காய்ச்சல் பரவி வருகிறது. சாதாரண காய்ச்சல் போல ஏற்படும் இந்த நோய் எலியின் சிறுநீரகம் மூலம் பரவ கூடியது. எலியின் சிறுநீர், கழிவு பொருட்கள் கலந்த நீரில் தொடர்பு ஏற்பட்டு இருந்தால் இந்த காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வாந்தி, பேதி, மயக்கம், உடல் எடை குறைவு தொடங்கி மரணம் வரை ஏற்படும்.

எத்தனை பலி

இந்த காய்ச்சல் காரணமாக இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை கேரள சுகாதரத்துறையும் உறுதி செய்துள்ளது. அதேபோல் இந்த அறிகுறியுடன் இன்னும் நிறைய பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் பலர் இளைஞர்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பரவும் பீதி

இந்த காய்ச்சல் வேகமாக பரவக்கூடியது. இதனால் எளிதாக மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த காய்ச்சல் அறிகுறியுடன் நிறைய பேர் அனுமதிக்கப்பட்டு இருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் பீதி ஏற்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: