பிரதமர் மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரி அமைப்பை சார்ந்த 5 பேர் அண்மையில் புனே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதை அடுத்து காட்டில் மறைந்து இருக்கும் நட்சலைட்டுகள் தற்போது நகரங்களில் பல வசதிகளுடன் இருப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புனேயின் பீமா கோரிகான் பகுதியில் நடந்த கலவரத்திற்கு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடது சாரித் தலைவர்கள் எனப் பலரின் வீடுகளில் புனே போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினார்கள். கோவா, ஹரியாணா, தெலங்கானா, மும்பை, டெல்லி என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.
இதில் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், சமூக ஆர்வலர் வெர்நான் கோன்சால்வேஸ், அருண் பெரேரியா, கவுதம் நவ்லகா, தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் சுதா பரத்வாஜ், தெலுங்கு கவிஞர் வரவரா ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது தொடர்பாக ரீட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 29-ஆம் தேதி காலை வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு முறையீடப்பட்டது. ஆனால் 29-ஆம் தேதி மதியம்தான் விசாரணை எடுக்கப்படும் என்று ஒத்துக்கொள்ளவே அன்று மாலை 4.30 மணி அளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கான் வில்கர் மற்றும் நீதிபதி சந்திரா சூடு ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் இந்த கைது ஏற்கதக்கதல்ல எனக்கூறி உச்சநீதிமன்றம் அவர்கள் 5 பேரையும் 6-ஆம் தேதிவரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது.
இதனை அடுத்து இந்த கைது சரியானதுதான் என ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்பெல்லாம் நட்சலைட் மற்றும் மாவோயிஸ்டுகள் காடுகளிலும், மலைகளிலும் பதுங்கி வாழ்ந்துவந்தனர் ஆனால் தற்போது நகரங்களில் பல வசதிகளுடன் வாழ்ந்துவருகின்றனர் என கூறினார். மேலும் இந்தியாவில் 120 மாவட்டங்களில் நட்சலைட் ஆதிக்கம் இருந்ததாகவும் தற்போது அது 12 மாவட்டங்களாக குறைந்ததாகவும் அதற்கு காரணம் அவர்கள் நகரங்களில் குடியேறியுள்ளனர் என்றும் கூறினார். நாட்டை துண்டாடுவது போன்ற பெரிய குற்றம் வேறெதுவும் இல்லை ஆனால் தற்போது விவகாரம் உச்சநீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்டுவிடுவதாகவும் தெரிவிதிவித்துள்ளார்.
-nakkheeran.in