நெல் கொள்முதல் நிலையங்களை மூடும் விவகாரம் – மத்திய அரசு கூறியது என்ன?

தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடவேண்டும் என்பதற்கு எந்தவித காரணங்களையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என தமிழக உணவுத்துறை அமைச்சர் காமாராஜ் தெரிவித்துள்ளார்.

குறுவை நெல் சாகுபடி முடிந்துள்ள நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களை ஆகஸ்ட் 31ம் தேதியுடன் மூடவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டதால், விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் முன்னர் தெரிவித்திருந்தது.

விவசாயிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ், நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது என்றும், விவசாயிகள் தொடர்ந்து தங்களது உற்பத்தியை அரசுக்கு அளிக்கலாம் என்றும் அறிவித்தார்.

நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு எதாவது காரணங்களை தெரிவித்துள்ளதா என கேட்டபோது, ”இதுவரை எந்தவிதமான காரணங்களையும் சொல்லவில்லை. இது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விஷயம்தான். தற்போது விளைச்சல் அதிகம் என்பதால் வெளி மார்கெட்டில் விவசாயிகள் விற்றுக்கொள்ளலாம் என்பதற்காக அரசிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் நிலையங்களை மூடலாம் என்று சொல்லியிருப்பார்கள். தமிழக அரசு தொடர்ந்து விவசாயிகளிடம் நெல்லை பெற்றுக்கொள்ளும்,” என்று அமைச்சர் காமராஜ் பிபிசிதமிழிடம் தெரிவித்தார்.

அமைச்சர் காமராஜ்

அதிகமான விளைச்சல் உள்ள நேரத்தில், குறைந்தபட்ச விலையை அரசு தரும்போது, வெளிமார்கெட்டில் அதைவிட குறைந்த விலைக்கு விற்க நேர்ந்தால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாதா என்ற கேட்டபோது, ”எல்லோருமே அரசின் கொள்முதல் நிலையங்களில் விற்கவேண்டும் என்பதில்லை. ஒருவேளை அவர்களுக்கு நல்ல விலை கிடைத்தால், வெளியில் விற்கலாம். வேறு எந்த காரணமும் இல்லை. 2002ல் இருந்து பரவலாக்கப்பட்ட முறையில்(Decentralised procurement) கொள்முதல் நடந்துவருகிறது. இந்த முறையைத்தான் பின்பற்றி வருகிறோம். எந்த பிரச்சனையும் இல்லை,” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழக அரசே கொள்முதல் நிலையங்களை தொடர்ந்து நடத்தும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளித்தாலும், விவசாயிகளின் வருமானத்தை 2020ல் இரண்டு மடங்காக பெருக்க வழிசெய்வதவாக அறிவித்த பாஜக அரசாங்கம், நெல் கொள்முதல் நிலையங்களை மூட வேண்டும் என எடுத்த முடிவு விவசாயக் குடிகளின் வாழ்வை சிதைப்பதற்கு சமம் என சாடுகிறார் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரான பெ.சண்முகம்.

கோணிப்பைகளைக் கூட வாங்கவில்லை

நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டிய தேவை என்ன, அந்த நிலையங்கள் செயல்படுவதால் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறதா? இத்தனை ஆண்டுகளாக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு என்ன லாபம் கிடைத்துள்ளது, பொது மக்களுக்கு அரிசி கிடைப்பதில் இந்த கொள்முதல் சிக்கல் என்ன விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டோம்.

நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு காரணம் சொல்லவில்லை: அமைச்சர் காமராஜ்

”அரிசி உள்ளிட்ட முக்கிய உணவு தானியங்களை அரசு கொள்முதல் செய்வது வழக்கம். ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் தங்களது உற்பத்தியை இந்த நிலையங்களில் செலுத்துவார்கள். இந்த தானியங்களை மத்திய,மாநில அரசுகள் பொது விநியோகத்திற்கு பயன்படுத்திக்கொள்கின்றன. அதோடு இந்த நிலையங்களில் விற்பனை செய்தால் விவசாயிகளுக்கு அவர்களின் உற்பத்திப் பொருளுக்கு குறைந்தபட்ச விலையை அரசு கொடுக்கும்,” என்று விளக்கினார்.

”இந்த கொள்முதல் நிலையங்களை மூடினால், குறுவை கால நெல் மூட்டைகளை விவசாயிகள் தேக்கிவைத்துக்கொள்ள முடியாமல், தனியார் முதலாளிகளிடம் மிக குறைந்தவிலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்படும். அதேபோல, அரசின் பொது விநியோகத்திற்கும் தானியம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு, தனியார் முதலாளிகளை நாடவேண்டும். தற்போது ஒரு குவிண்டால் நெல்லுக்கு(அதாவது நூறு கிலோ நெல்) குறைந்தபட்சம் ரூ.1,500 வரை தரப்படும். அரசு கொள்முதல் செய்ய மறுத்தால், விவசாயிகள் இதைவிட குறைந்த விலைக்கு விற்கவேண்டிவரும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளின் எதிர்ப்பால் முடிவுக்கு வந்த சிக்கல்

முந்தைய காலங்களில், கொள்முதல் நிலையங்கள் செயல்படாமல் இருப்பதற்கு அரசு பலவிதமான காரணங்களை அடுக்கும் என்று கூறிய அவர், ” சமீபத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விதைநெல் விற்பனைக்குத் தேவையான கோணிப்பைகளை அரசு சரியான நேரத்தில் கொள்முதல் செய்யாததால் விவசாயிகளுக்கு மானியம் சென்று சேருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள். ஆனால் மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும், விவசாயிகளின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தெளிவு,” என்கிறார் சண்முகம்.

தமிழகம் முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன என்று கூறும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரான பி ஆர் பாண்டியன், ”திடீரென கொள்முதல் நிறுத்தப்படும் என தமிழக நுகர்பொருள் வாணிபக்கழகம் அறிவிப்பை வெளியிட்டதால் பல விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். நெல் விளைச்சல் அதிகமாக உள்ள நேரத்தில் கொள்முதல் நிலையங்களை மூடுவோம் என்றனர். பின்னர் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநில அரசு ஏற்று நடத்துவதாக கூறியுள்ளது,” என்கிறார். -BBC_Tamil

TAGS: