தமிழக வரலாறு காணாத ரெய்டு.. சிபிஐ அதிகாரிகளின் முற்றுகையில் சிக்கிய டிஜிபி இல்லம்!

சென்னை: பதவியில் உள்ள டிஜிபி ஒருவரது வீட்டில் ரெயிடு நடப்பது தமிழக வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. கிட்டத்தட்ட 11 மணி நேரம் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் சிபிஐ ரெய்டு நடத்தியுள்ளது.

குட்கா ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உட்பட கல்லூரியிலிருந்து கல்குவாரி வரை வருமானவரித் துறை அதிகாரிகள் ரவுண்டு கட்டிவிட்டார்கள். இந்த விவகாரத்தில் அமைச்சர் எக்கச்சக்கமாக சிக்கி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுதான் முதல்முறை

இதே பிரச்சனையில், டிஜிபி ராஜேந்திரன் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை இன்று நடத்தியுள்ளனர். எப்படி தமிழக வரலாற்றில் முதல்முறையாக தலைமை செயலக அலுவலகத்தில் ரெயிடு நடத்தப்பட்டு தலைமை செயலாளர் ராம்மோகன்ராவ் சிக்கியதைபோல, இப்போதும் தமிழக வரலாற்றில் குறிப்பாக காவல்துறையில், ஒரு டிஜிபி வீட்டில் சோதனை நடத்துவது இதுதான் முதல்முறை!

என்ன பணி செய்தார்?

டிஜிபி ராஜேந்திரன் விவகாரத்தில், எவ்வளவோ பேர் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியலில் இருந்தும் ராஜேந்திரனுக்கு தமிழக அரசு இந்த பதவியை கொடுத்தது ஏன்? எதற்காக பணி நீட்டிப்பில் ராஜேந்திரனை நீட்டித்து உத்தரவிட வேண்டும்? தமிழக அரசு பதவி நீட்டிப்புக்கான உத்தரவு பிறப்பித்த பிறகு, தன் பணியினை எந்த அளவுக்கு சிறப்பாக செய்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆதாரங்கள் இருக்குமா?

எவ்வளவோ செயல்களை புரிந்து பணியாற்றி ஓய்வு பெறும் இந்த வயதில் இதுபோன்ற புகார்களில் சிக்கி கொள்ள வேண்டுமா? நியாயப்படி பார்த்தால், எப்போது அந்த டைரியில் தனது பெயர் இடம் பெற்றிருந்ததோ அப்போதே தார்மீக அடிப்படையில் தனது பதவியை ராஜினாமா செய்ய டிஜிபி முன்வந்திருக்க வேண்டும்? செய்தாரா? இல்லையே? இன்று வீடு வரை ரெய்டு நடத்தும்படி நடந்து கொண்டார். முதலில் இந்த சோதனை முறையாக நடக்குமா என்றும் தெரியவில்லை. ஏனெனில் டைரியில் இவரது பெயர் அடிபட்டு 2 வருஷம் ஆகிறது. இவ்வளவுநாள் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் வீட்டில் வைத்து கொண்டா இருப்பார்கள் என்று தெரியவில்லை.

மாநில கட்சிகளின் பலவீனம்

இப்படி மூத்த அதிகாரிகளும், அமைச்சர்களும் ஊழலிலும் மற்ற புகார்களிலும் சிக்கி கொள்வது பாஜகவுக்கு இன்னும் வலிமையைதான் கூட்டுகிறது. இதை சாக்காக வைத்துக் கொண்டு மத்திய பாஜக, தமிழக அரசின் கண்களில் விரலை விட்டு ஆட்டாதா? ஊழல்களே தமிழகத்தை மேலும் மேலும் பலவீனமாக்கி வருகிறது. தவறுமேல் தவறு செய்துவிட்டு, தானாக போய் பாஜக பிடியில் அமைச்சர்களும், அதிகாரிகளும் சிக்கிகொள்ளும் நிலைமை ஏற்படாதா? இந்த போக்கால் தமிழகத்தின் மாநில கட்சிகள் மேலும் மேலும் பலவீனமாகி கொண்டிருப்பதை உணர்கிறாரா? இல்லையா?

டிஜிபி மாற்றப்படுவாரா?

இதில், ராஜேந்திரனை பதவியிலிருந்து மாற்றுவது தொடர்பாகவும் உள்துறை செயலாளர், தலைமை செயலாளர், உள்ளிட்ட தமிழக அரசு அதிகாரிகளுடன் முதல்வர் விவாதித்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக குட்கா விவகாரத்திற்கு பிறகு டிஜிபியை மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அல்லது ராஜேந்திரனே தானாக பதவி விலகவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அடுத்து ஒருவர் புதிதாக டிஜிபியாக நியமிக்கப்படலாம் என்றும் பேசப்படுகிறது. புதிதாக வருபவராவது கறை படாதவராக இருந்து, பாஜகவின் கைக்குள் சிக்கி கொள்ளாமல் தமிழக மக்களுக்காக கடமையாற்றினால் சரி!

tamil.oneindia.com

TAGS: