சென்னை: குட்கா முறைகேடு என்றால் என்ன எப்படி அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் அதிகாரிகள் பெயர்கள் இதில் அடிபடுகின்றன, ஏன் சிபிஐ இந்த வழக்கை விசாரிக்கிறது என்பது குறித்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டுமானால், சற்று இந்த குட்டி பிளாஷ்பேக்கை பாருங்கள்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னையை அடுத்த மாதவரத்தில் குட்கா வியாபாரி மாதவராவ் குடோனில் வருமான வரி சோதனை நடைபெற்றது.
வருமான வரி சோதனையின் போது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய, 2013ம் ஆண்டு முதல் 2016வரை யாருக்கெல்லாம் லஞ்சம் வழங்கப்பட்டது என்ற விவரம் இருந்தது.
இந்த டைரி மூலம், குட்கா ஊழல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
ஹைகோர்ட் உத்தரவு
இந்நிலையில், குட்கா ஊழல் விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்றம், அதையேற்று உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் 30ம் தேதி வழக்குப்பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள், குட்கா ஊழல் விவகாரம் தொடர்பான ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைத்துறையிடமிருந்து பெற்றனர்.
மாதவராவிடம் விசாரணை
கடந்த 3 மாதமாக குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து முதற்கட்டமாக குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சென்னையிலுள்ள சிபிஐ அலுவலகத்திற்கு மாதவராவை வரவைத்த அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு சிபிஐ அதிகாரிகள் சென்னை வந்திருந்தனர்.
திடுக்கிடும் வாக்குமூலம்
அதிகாரிகள் எழுப்பிய சரமாரி கேள்விகளுக்கு மாதவராவ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. குட்கா விநியோகத்திற்கு தடையாக உள்ள காவல் துறை அதிகாரிகளை பணியிடம் மாற்றமும் செய்து இருப்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது குட்கா குடோனுக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கைதுக்கு வாய்ப்பு
குட்கா ஊழல் விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகள் வீட்டில் இன்று சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது உயர்நீதிமன்றம் பரிந்துரை மூலமாக சிபிஐ விசாரிக்கும் வழக்கு என்பதால், கைது நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

























