ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

சில ஆண்டுகளாக இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, “அரசியல் சட்டம் 161 பிரிவை பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என்று தீர்ப்பு வழங்கினர்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம்

விடுதலைக்கான கடிதம்

2014ஆம் ஆண்டு, இந்த ஏழு பேரையும் விடுவிக்கப் போவதாக ஜெ ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழக அரசு அறிவித்து, மத்திய அரசின் கருத்தைக் கோரியிருந்தது. ஆனால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு தெரிவித்தது.

பின்னர் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது எனவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை அறிய விரும்புவதாகவும் மத்திய உள்துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் கடிதம் எழுதி இருந்தார்.

மத்திய அரசுக்கு தமிழக அரசு மூன்று நாள் அவகாசம் கொடுத்திருந்த நிலையில், மத்திய அரசு பதிலளிக்காததால், பிப்ரவரி 19-ம் தேதி அமைச்சரவை எடுத்த முடிவின்படி, அவர்களை விடுதலை செய்வதாக 20-ம் தேதி ஜெயலலிதா அறிவித்தார். மத்திய அரசு அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடியது.

கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு தூக்குத்தண்டனையும், மற்ற நால்வருக்கும் ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கூறி மூன்று பேரும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருந்தனர். இம்மனு குறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க காலதாமதமானதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.

விரைந்து நடவடிக்க எடுக்க வேண்டும்

அற்புதம் அம்மாள்
அற்புதம் அம்மாள்

இந்த தீர்ப்பு தொடர்பாக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளை தொடர்பு கொண்ட பிபிசி தமிழிடம், அவர், “மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. 28 ஆண்டுகளாக என் மகன் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறான். இந்திய வலாற்றில் இவ்வளவு நீண்டகாலமாக ஏதேனும் வழக்கு நடந்திருக்குமா என்று தெரியவில்லை. தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வரை சந்திக்கும் முயற்சியில் இருக்கிறேன்” என்றார். -BBC_Tamil

TAGS: