விடுதலை செய்யுங்கள்.. தமிழக அரசுக்கு 7 தமிழர்கள் புதிதாக மனு.. வக்கீலிடம் வழங்கினர்!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் விடுதலை குறித்து, தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

இது சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால், ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்ய, சட்டப்பிரிவு, 435-ன் கீழ் மத்திய அரசின் அனுமதி அவசியமாகும் என்பதுதான் மத்திய அரசின் வாதமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், அந்த சட்டப்பிரிவை கொண்டுதான் விடுதலை செய்தாக வேண்டும் என்ற கட்டாயம், இல்லை. சுப்ரீம் கோர்ட்டின் நேற்றைய தீர்ப்பு, மாநில அரசுக்கு வழங்கியுள்ள அதிகாரத்தின்படி, 161-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி மாநில அரசால் தமக்குள்ள அதிகாரத்தின் கீழ் 7 தமிழரையும் விடுதலை செய்வதாக அறிவிக்க முடியும்.

இதற்காக தமிழக அமைச்சரவை கூட்டப்பட வேண்டும். அமைச்சரவையில், 7 தமிழர் விடுதலை தொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். பின்னர், அந்த தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆளுநர் இதில் இறுதி முடிவை எடுப்பார்.

முன்னதாக, தங்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, 7 பேர் சார்பிலும், புதிதாக ஒரு மனு, தமிழக அரசுக்கு வழங்கப்பட வேண்டும். அந்த கோரிக்கையை அடிப்படையாக கொண்டுதான் தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி நடவடிக்கை எடுக்க முடியும் என்பதுதான் சட்ட நடைமுறை.

இதன்படி வேலூர் சிறையிலுள்ள 7 பேரும், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசை கோரும் மனுவை, வழக்கறிஞர் புகழேந்தியிடம் இன்று அளித்தனர். அவர், நாளை அரசிடம் இதை சமர்ப்பிக்க உள்ளார். இந்த நிலையில்தான், ஞாயிற்றுக்கிழமை, சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் ஏழு தமிழர்கள் மனுவை பரிசீலித்து, விடுதலை செய்யும் உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கும் வாய்ப்பு உள்ளது.

tamil.oneindia.com

TAGS: