கிராமவாசி வீட்டிற்குள் புகுந்து உணவு, உடை கேட்ட 3 தீவிரவாதிகள் என்கவுண்டரில் சுட்டு கொலை

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஜஜ்ஜார் கொத்லி வன பகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 3 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவர்கள் கிராமவாசி ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து உணவு மற்றும் உடை கேட்டுள்ளனர்.  பின்னர் வாகனம் ஒன்றும் கேட்டுள்ளனர்.  அவர்கள் சென்றபின் போலீசாருக்கு கிராமவாசி தகவல் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளின் ஊடுருவலை அடுத்து நக்ரோட்டா-ஜஜ்ஜார் கொத்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.  அந்த பகுதியில் உள்ள பள்ளிகளும் இன்று மூடப்பட்டன.

இதனை தொடர்ந்து அந்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  தொடர்ந்து தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டனர்.  இந்த வேட்டையில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பாதுகாப்பு படையினர் பயன்படுத்தினர்.

இந்த நிலையில், ரியாசி நகரில் காக்ரியால் பகுதியில் வீடு ஒன்றின் அருகே தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.  இதனை தொடர்ந்து தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே மாலை 5 மணிவரை துப்பாக்கி சண்டை நீடித்தது.

இதில் 3 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்கள் அனைவரும் 18 முதல் 22 வயது நிறைந்தவர்கள்.  அவர்கள் பாகிஸ்தானில் இருந்து ஹீராநகர் சர்வதேச எல்லை பகுதி வழியே இந்தியாவிற்குள் ஊடுருவியிருக்க கூடும் என கூறப்படுகிறது.  அவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த சம்பவத்தில் 6 மத்திய ரிசர்வ் போலீசார், டி.எஸ்.பி. மோகன் லால் உள்ளிட்ட 5 போலீசார் மற்றும் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தனர்.  அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

-dailythanthi.com

TAGS: