சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது.
ஆலோசனையின் முடிவில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதுகுறித்து தற்போது ஆளுநர் முடிவெடுத்து இருக்கிறார். சரியாக ஒருவாரம் கழித்து ஆளுநர் இதில் இன்று மிக முக்கிய முடிவு எடுத்துள்ளார்.
பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதனால் இதில் விரைவாக முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.