‘இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது – ஆனால் அது மட்டும் போதுமா?’

தொடக்கத்திலிருந்தே புலி இந்தியாவின் தேசிய விலங்காக இல்லை. சுதந்திரத்துக்குப் பிறகு 1948இல் இந்தியாவின் தேசிய விலங்காக ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு ஆசிய சிங்கத்தையே அறிவித்தது.

ஆனால், 1973இல் இந்திய வனவுயிர் வாரியம் புலியை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவித்தது. அதன் காரணம் சிங்கம் குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவில் மட்டுமே இருந்தது. புலிகள் நாடு முழுவதும் காடுகளில் பரவி வாழ்கின்றன.

2014ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட புலிகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பில் 22 மாநிலங்களில் உள்ள வனப்பகுதிகளில் 2,226 புலிகள் வாழ்ந்து வந்தன. அதற்கு முன்பு 2010இல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட எண்ணிக்கையான 1,706ஐ விடவும் இது அதிகம்.

2006இல் 1411 புலிகள் மட்டுமே இந்தியாவில் இருந்தன. தற்போது நடந்துவரும் 2018ஆம் ஆண்டுக்கான புலிகள் கணக்கெடுப்பின் முடிவுகள் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டவிரோத வேட்டையால் கடுமையாகச் சரிந்துவந்த புலிகளின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் கணிசமாக அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் அடைத்து வைத்து வளர்க்கப்படும் புலிகளின் எண்ணிக்கை இந்தியாவைவிடவும் அதிகமானதாக இருந்தாலும், காட்டில் வாழும் புலிகளை அதிகமாக கொண்ட உலக நாடாக இந்தியாவே விளங்குகிறது. உலகில் உள்ள காட்டுப் புலிகளில் 60% இந்தியாவில்தான் வசிக்கின்றன.

புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அது குறித்த நேர்மறையான செய்திகளை விடவும் எதிர்மறை செய்திகளையே அதிகமாகக் கேட்க முடிகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பந்தர்காவ்டா வனப்பகுதியில் உள்ள ஆட்கொல்லி பெண் புலி ஒன்றை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாவிட்டால் சுட்டுப்பிடிக்கலாம் என்று மும்பை உயர் நீதிமன்றம் அம்மாநில வனத்துறைக்கு அனுமதி வழங்கியிருந்தது.

asiatic lion1973க்கு முன்பு இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கமே இருந்தது.

அதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் செப்டம்பர் 11 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்தத் தீர்ப்பு வந்த மறுநாளே புலிகள் குறித்த இன்னொரு செய்தியும் ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து ஒடிஷாவின் சத்கோசியா புலிகள் சரணாலயத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்ட புலி ஒன்று, அங்கு குளத்தில் குளிக்கச் சென்ற பெண் ஒருவரை அடித்துக் கொன்றதால், கோபமடைந்த உள்ளூர்வாசிகள் வனத்துறை அலுவலகத்துக்குத் தீ வைத்ததுடன், வன அதிகாரிகளையும் தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது அந்தப் பெண் புலியை மத்தியப் பிரதேச அரசிடமே திரும்ப ஒப்படைக்க ஒடிஷா அரசு முடிவு செய்துள்ளது.

ஓய்வு பெற்ற இந்திய வனத்துறை அதிகாரி பத்ரசாமி இது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். 2016இல் நீலகிரியில் இவர் பணியாற்றியபோது ஆட்கொல்லிப் புலி ஒன்று பெண் ஒருவரைக் கொன்றதால் கோபமுற்ற பொது மக்கள் இவரது வனத்துறை வாகனத்தை எரித்து விட்ட சம்பவமும் நடந்துள்ளது.

bengal tiger

“ஒரு காட்டில் முன்பு புலிகள் வாழ்ந்துவந்து வேட்டை உள்ளிட்ட காரணங்களால் அங்கு புலிகள் எண்ணிக்கை அழிந்துபோனாலோ, ஒரு காட்டில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து இரை மற்றும் வாழ்விடத்துக்காக பற்றாக்குறை ஏற்பட்டு புலிகளுக்குள் மோதல் உருவானலோ, அங்கிருந்து புலிகள் இல்லாத அல்லது குறைவாக உள்ள வேறொரு காட்டுக்கு அவை இடமாற்றம் செய்யப்படும்.”

“அவ்வாறு இடமாற்றம் செய்யும்போது, புலிகள் கொண்டு விடப்படும் புதிய காட்டில் அங்கு இதற்கு முன்பு புலிகள் வாழ்ந்தபோது நிலவிய அதே இயற்கைச்சூழல் நிலவுகிறதா, புலிக்குத் தேவையான போதிய வளங்கள் அங்கு உள்ளனவா என்பது குறித்து ஆராய வேண்டும். அப்படி இல்லாத காட்டில் விடப்படும் புலிகள் இரை தேடி காட்டைவிட்டு வெளியே வந்து கால்நடைகள் மற்றும் மனிதர்களைக் கொல்லும் வாய்ப்புண்டு,” என்கிறார் பத்ரசாமி.

சமீப ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரியதுதான் என்றாலும் அது மட்டும் போதுமா என்று கேள்வி எழுப்புகிறார் பத்ரசாமி.

“ஒரு காட்டில் புலி வாழ வேண்டுமென்றால் அங்கு மான் போன்ற இரை விலங்குகள் அதிகமாக இருக்க வேண்டும். இந்த விலங்குகள் அங்கு வாழ வேண்டுமானால் தாவரங்கள் செழிப்பாக இருக்க வேண்டும். தாவரங்கள் செழிப்பாக இருக்க நீர் நிலைகள் பராமரிக்கப்பட வேண்டும்.”

human animal conflict
மனிதர்களுடனான மோதலின்போது பிடிக்கப்பட்ட புலி ஒன்று

“வேட்டைத் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இப்பொழுது இருக்கும் 2,200 புலிகள் என்ற எண்ணிக்கையை 22 ஆயிரமாகக் கூட அதிகரிக்க முடியும். ஆனால், அந்த 22 ஆயிரம் புலிகள் வாழ்வதற்குப் போதுமான காடுகள் நம்மிடம் உள்ளனவா,” என வினவுகிறார் அவர்.

ஒரு வனத்துக்குள் இளம் புலிகள் வரும்போது, அங்கு ஏற்கனவே வசித்து வந்த வயது முதிர்ந்த புலிகளை வெளியே விரட்டி விடுவதும், விலங்கு – மனித மோதலுக்கு வழி வகுக்கிறது. காட்டிலிருந்து இவ்வாறு காயமடைந்து, வலுவிழந்து வெளியேறும் புலிகளே கால்நடைகளை கொல்வதுடன், ஆட்கொல்லிகளாகவும் மாறுகின்றன.

இந்திரா காந்திக்கு பிறகு பிரதமர் பதவி வகித்தவர்கள் யாரும் சுற்றுச்சூழல் அறிஞர்கள் யாரையும் தங்களுக்கு நெருக்கமான வட்டத்துக்குள் வைத்துக்கொள்ளவில்ல என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் ராமமூர்த்தி.

“300 கிலோ எடையுள்ள மான் அல்லது காட்டெருமையை விட்டுவிட்டு எந்தப் பெரும்பூனை வகையைச் சேர்ந்த விலங்கும் மனிதர்களை உண்ண விரும்பாது. அப்படி நடந்தால் அது காட்டுக்குள் இரை குறைவதே முக்கிய காரணமாகும். வலுவிழந்த, வயது முதிர்ந்த புலிகள் தேள், தவளை போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய இரையை வேட்டையாடி உண்ணும்.”

தாய் மூலம் மனித இறைச்சியை உண்டு, அதன் பின் தானும் ஆட்கொல்லியாக மாறும் விலங்குகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவு என்கிறார் அவர்.

big catசிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் பெரும் பூனைகள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆட்கொல்லியாக மாறும் விலங்குகளை சுட்டுக்கொல்வதை விடவும், அவற்றை ஆய்வுக்காகவும், வனவிலங்கு பூங்காக்களில் காட்சிப்படுத்தவும் பயன்படுத்தலாம் என்கிறார்.

“ஒரு வேளை அவை சுட்டுக்கொல்லப்பட்டாலும் அவற்றின் தோலைக் கடத்துவதைத் தடுக்க எரியூட்டப்படுகின்றன. ஆனால், அவற்றைப் பதப்படுத்தி வனவுயிர்கள் குறித்து படிக்கும் மாணவர்களுக்காகப் பயன்படுத்தலாம்.”

காட்டின் நாடியை நன்றாக அறிந்த மலைவாழ் மக்கள் அல்லாதவர்கள் காட்டுக்குள் நுழைவதால் பயப்படும் விலங்குகள் அவர்களைத் தாக்க முற்படுவதால் மனித – விலங்கு மோதல் உண்டாவதாகவும், விலங்குகள் ஆட்கொல்லியாக மாறும் வாய்ப்பு அதிகமாவதாகவும் ராமமூர்த்தி தெரிவித்தார். -BBC_Tamil

TAGS: