8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை.. மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் குட்டு!

சென்னை: சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று காலை சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பசுமை வழி சாலை என்ற பெயரில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை போடப்பட உள்ளது. திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது.

இதில் விவசாய நிலங்கள், பாரம்பரியமாக கட்டப்பட்ட வீடுகள் என கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகி உள்ளது.

சாலை

இரண்டு நாட்கள் முன்பு சேலம் – சென்னை 8 வழிச்சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரபரப்பு அறிக்கை அளித்தது. இந்த நிலையில் இந்த அறிக்கை குறித்து இன்று சேலம் சாலை வழக்கில் கருத்து தெரிவித்த சென்னை ஹைகோர்ட் நீதிபதிகள், அறிக்கையில் மாற்றம் இருக்கிறது, இதனால் இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை தடை செய்ய வேண்டி இருக்கும் என்று கூறினார்கள்.

நிறுத்தம்

ஆனால் மத்திய அரசு தாமாக முன்வந்து சேலம் சென்னை 8 வழி சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்து இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துது. உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகளின் கடுமையான கேள்விகளை தொடர்ந்து இந்த பதிலை அளித்துள்ளது. அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை பணிகளை தொடங்க மாட்டோம் என்றுள்ளது.

மாற்றம் செய்ய முடிவு

மேலும் சேலம் பசுமை வழி சாலை திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. சாலையின் மொத்த அமைப்பையும் மாற்ற வேண்டும். இதனால் சாலை பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது, என்று பதில் அளித்துள்ளது.

இடைக்கால தடை

மத்திய அரசின் அறிக்கையில் மாற்றம் இருப்பதால், சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 6 வழி சாலையாக சேலம் சாலையை மாற்ற திட்டமிட்ட பின் அந்த திட்டத்தை அரசு சமர்ப்பிக்க வேண்டும், பின் அதை வைத்தே இடைக்கால தடையில் முடிவெடுக்க முடியும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

tamil.oneindia.com

TAGS: