நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு கண்டனம்

ராமேசுவரம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 3,500 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக 10 குட்டிக் கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லும்படி எச்சரிக்கை செய்தனர். இதையடுத்து ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்குள் வீசியிருந்த வலைகளை அவசரம், அவசரமாக எடுத்துக்கொண்டு கரைக்கு திரும்ப முயன்றனர்.

ஆனால் அதற்குள் இலங்கை கடற்படையினர் தங்களது கப்பல்களால் மீனவர்களின் படகுகள் மீது மோதினர். இதில் மீனவர்களின் படகுகள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஒரு சில படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் அந்த படகுகளுக்குள் இறங்கி மீனவர்களை தாக்கியதுடன், அதில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் கடலில் வீசி எறிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

இந்தச் சம்பவம் மீனவர்கள் மத்தியில் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததில் ராமேசுவரம் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பினர். தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுவதால் ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு செல்வதற்கு ஆர்வமில்லாமல் உள்ளனர். இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

-dailythanthi.com

TAGS: