ஐதராபாத்: தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த பினராய்- அம்ருதா ஜோடியினர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு பினராய் சென்றுள்ளார். தம்பதியினர் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவர், பினராயின் தலையில் தாக்கியுள்ளார்.
தன்னை காத்துக் கொள்ள அந்த நபருடன் பினராயி சண்டையிட்டபோதும், பினராயின் தலையில் இரும்புகம்பியால் கொடூரமாக தாக்கிவிட்டு அந்நபர் தப்பித்து ஓடியுள்ளார். தனது கண்ணெதிரிலேயே தனது கணவன் தாக்கப்படுவதை அறிந்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.
ஆனால் மற்றொரு பெண் அம்ருதாவை அடிப்பதற்கு துரத்தியுள்ளார். அப்பெண்ணிடம் இருந்து தப்பிப்பதற்காக அம்ருதா ஓடியுள்ளார். இதனைத் தொடர்ந்து பினராயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளது. போலீசார் விசாரணையில், அம்ருதா உயர்ந்த சாதியை சேர்ந்தவர் என்றும், தாழ்ந்த சாதியை சேர்ந்த பினராயி பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அம்ருதாவின் தந்தை ஆட்களை வைத்து பினராயை கொலை செய்துள்ளார் என பினராயின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
பினராயி வெட்டி கொலை செய்யப்பட்டபோது, அந்த காட்சிகள் மருத்துவமனைக்கு வெளியே இருந்த கண்காணிப்பு சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதில் பதிவான கூலிப்படையை சேர்ந்தவர்களின் உருவத்தை வைத்து போலீஸார் துப்பு துலக்கினர்.
பினராயியை கொலை செய்த கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல நாட்கள் பினராயி-யின் நடவடிக்கையை வேவு பார்த்துள்ளனர். கொலை செய்யப்பட்ட அன்றும், பினராயி வீட்டுக்கு வந்த கூலிப்படை கும்பல் அவரை பின் தொடர்ந்தே மருத்துவமனைக்கு சென்றுள்ளது. அங்கு வைத்து கொடூர கொலையை நடத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து கூலிப்படையைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து அம்ருதாவின் தந்தை மாருதி ராவும் அவரது தம்பியும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாருதி ராவ் போலீஸிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ‘‘எனது மகள் அம்ருதா தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தது எனக்கு பிடிக்கவில்லை. அவர் கர்ப்பமுற்று இருப்பதாக தகவல் கிடைத்ததும் எனது ஆத்திரம் அதிகமானது. எனது மகளுக்கு குழந்தை பிறக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.
அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் மருத்துமனைக்கு சென்று கர்ப்பத்தை கலைக்குமாறும், பணம் தருவதாகவும் கூறினேன். ஆனால் டாக்டர்கள் உடன்படவில்லை. இதன் பிறகு எனது மகளை மிரட்டினேன். குழந்தை பெற்றெடுத்தால் கணவனை கொன்று விடுவாக கூறினேன்.
எனது மிரட்டலை மகள் அலட்சியம் செய்ததால் கடும் கோபத்துக்கு ஆளாகி பினராயை கொலை செய்ய கூலிப்படையை அமர்த்தினேன். எனது சொத்து முழுவதும் அழிந்தாலும் பரவாயில்லை, ஒரு கோடி ரூபாய் தருவதாக கூலிப்படையிடம் தெரிவித்தேன்’’ எனக் கூறியுள்ளார்.
இதுபோலவே அம்ருதாவும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ‘‘நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததால் தந்தை மிகுந்த ஆத்திரமடைந்தார். கர்ப்பத்தை கலைத்து விடுமாறும், இல்லையென்றால் எனது கணவரை கொன்று விடுவதாகவும் தந்தை மாருதி ராவ் மிரட்டினார்’’ எனது தந்தைக்கு முன்னாள் எம்.எல் ஏ. ஒருவரும் உதவி உள்ளார், எனக் கூறியுள்ளார்.
-dailythanthi.com