தமிழர்களின் விடுதலை தொடர்பில் ஆளுநர் தாமதப்படுத்துவதன் மூலம் அவர் யாருக்கானவர் என்பது நமக்குத் தெரிகிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
15.09.2016 அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற காவிரி உரிமை மீட்புப் பேரணியின் போது தனது உயிரை தீக்கிரையாக்கிக்கொண்ட “காவிரிச்செல்வன்” தம்பி பா.விக்னேசுவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில், 7 தமிழர்களின் விடுதலை தொடர்பில் நீண்ட கால சட்டப்போராட்டத்தின் விளைவாகத்தான் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
அதன்பிறகு, 161ஆவது சட்டப்பிரிவை பயன்படுத்தி, அமைச்சரவைத் தீர்மானத்தை நிறைவேற்றி அதற்கு ஆளுநரை ஒப்புதல் அளிக்கச் செய்வதுதான் எழுவரின் விடுதலைக்கான வாய்ப்பாக இருக்கிறது.
இதில் ஆளுநர் தாமதப்படுத்துவதன் மூலம் அவர் யாருக்கானவர் என்பது நமக்கு தெரிகின்றது. அந்த தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காவிட்டால் போராட்டங்களை முன்னெடுத்து அழுத்தம் கொடுத்து விடுதலையைச் சாத்தியப்படுத்துவோம். என சீமான் தெரிவித்துள்ளார்.
-athirvu.in