அந்த ஜாதிக்காரனா.. செருப்பை கையில் தூக்கு.. சைக்கிளை விட்டு இறங்கு.. இது மதுரை சம்பவம்!

மதுரை: சங்கதி தெரியுமா? தாழ்த்தப்பட்டவர்கள் ஊருக்குள் நுழையும்போது சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போகக்கூடாதாம். இது நடந்து கொண்டிருப்பது, வட மாநிலங்களில் இல்லை.. நம்ம பெரியார் பிறந்த மண்ணில்தான்!!

மதுரைக்கு அருகே ஒரு கிராமத்தில்தான் இந்த அநீதி இன்னமும் அரங்கேறி கொண்டிருக்கிறது. இந்த கிராமத்தில் ஆதிக்க சாதியும் உள்ளது, அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களும் உள்ளனர்.

நடைமுறை வேறு

ஊர்தான் இருவருக்கும் ஒன்று. ஆனால் நடைமுறை சித்தாந்தம் வேறு வேறு. இந்த கிராமத்திற்குள் குறிப்பாக ஆதிக்க ஜாதியினர் வசிக்கும் குடியிருப்பு பகுதி உள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போக கூடாது என்பது இன்றும் எழுதப்படாத விதியாக உள்ளது. இது சம்பந்தமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.

அபாயகரமானது

பெரும்பாலும் வட மாநிலங்களில்தான் இதுபோன்ற அக்கிரமங்கள் இன்றும் கூட உள்ளன. ஆனால் தமிழகத்தில் ஒரு கிராமத்தில் இது தொடருவது அதிர்ச்சி தருகிறது. நம் ஆட்கள் எல்லாமே வெறும் வெட்டி பேச்சுதான். வீராவேசம்தான்.. இந்த லட்சணத்தில் கிராமங்களை வைத்திருந்தால் எங்கிருந்து வல்லரசாவது? எங்கிருந்து ஒளிரும் இந்தியா வரப்போகிறது? இந்த கண்றாவியில் முதியவர்கள், பெரியவர்கள்தான் ஊறிக்கிடந்தார்கள் என்றால் தற்போதுள்ள இளைய சமுதாயமும் இதில் சிக்கி கொண்டுள்ளதுதான் மிக அபாயகரமான செயலாக உள்ளது.

வர்ணாசிரம அரசியல்

டீ கடைகளில் இரட்டைக் குவளைமுறை, சலூன் கடைகளில் முடிவெட்ட மறுப்பது, கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட அனுமதி மறுப்பு, என தீண்டாமையின் வடிவங்கள் இன்னும் தமிழகத்தில் தொடர்வது வேதனையளிக்கிறது. இது மாதிரியான ஆதிக்க சக்திகளின் வெறித்தனத்தை வெகுஜன மக்களின் முன்னிலையில் பகிரங்கப்படுத்த வேண்டும். மூலை முடுக்குகளில் கொண்டு சென்று சந்தி சிரிக்க வைக்க வேண்டும். தமிழகம் என்றில்லை ஒட்டுமொத்தவே நாடு முழுவதும் வர்ணாசிரம அரசியல் மாற்றப்பட வேண்டும்.

கனவு நனவாகாதோ?

மாறிவரும் விஞ்ஞான யுகத்தில், இன்னமும் இதுபோன்ற வேறுபாடுகளை பார்த்துக்கொண்டிருப்பது நமது சமுதாயத்தை மேலும் அவலநிலையின் விளிம்பு நிலையில் கொண்டு போய்நிறுத்திவிடும். இதனால் பாதிக்கப்படபோவது வருங்கால சந்ததிகள்தான். இன-பேத வேறுபாடு உடனடியாக களையப்படவில்லையென்றால், சமூகக் கலப்பு என்பது பற்றிய புரிதலே இல்லாமல் போய்விடும். இல்லையென்றால் தாழ்த்தப்பட்டோர்கள் ஊமைகளாக இருந்த காரணத்தால் அவர்களின் உரிமைக்காக விதை போட்டு கொடுத்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேர்கர் ஆகியோரின் கனவுகள் கனவுகளாகவே போய்விடும்.

tamil.oneindia.com

TAGS: