சென்னை: ஈழ படுகொலைக்கு தொடர்புடையவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அதிமுக தலைமை அலுவலகத்தில், உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் செப்டம்பர் 19-ல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுசூதனன் தலைமை
அதன்படி இன்று அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். இவர்களுடன் மா.பா. பாண்டியராஜன், செல்லூர் ராஜூ, அன்பழகன், வளர்மதி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
உறுப்பினர் சேர்க்கை
இதில், 30-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. மாநிலங்களில் அதிமுக உறுப்பினர்களின் சேர்க்கைகளை தீவிரப்படுத்துவது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகள் தொடர்பான ஆலோசனையும் கூட்டத்தில் நடத்தப்பட்டது.
போர்க்குற்றவாளிகள்
அத்துடன், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக, இலங்கை ஈழப் போரில் அப்பாவி தமிழர்களின் படுகொலைக்கு திமுகவும், காங்கிரசும் காரணம் என்றும், எனவே, இந்த படுகொலைக்கு தொடர்புடையவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராஜபக்சே பேட்டி
இலங்கையில் இறுதி கட்ட போரில், இந்திய அரசு தங்களுக்கு உதவி செய்ததாக இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.